சென்னை, ஜூலை 24- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசின் கெஜெட்டில் வெளியிட்டு காவிரி பாசன விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது.
இலங்கை பிரச்சினையில் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களைத் துடைத்திடும் வகையில் ராஜபக்சே மீதும், இலங்கை அரசு மீதும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. கூடங்குளம் பிரச்சினையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு திறக்கப்படும் வால்மார்ட்டை தமிழகத்தில் நுழையவிடாமல் உறுதியாக தடுத்து நிறுத்தியது என தி.மு.க. ஆட்சியில் எவற்றை எல்லாம் செய்யாமல் பல்வேறு பிரச்சினைகளில் இரட்டை வேடம்போட்டார்களோ அவற்றில் எல்லாம் உறுதியாக நடவடிக்கை எடுத்து வருபவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசே வாங்கிக்கொள்ளும் என்று அறிவித்து, மத்திய அரசிடமும் ஒப்புதல் பெற்று மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.
தமிழர்களின் இதயங்களில் தொடர்ந்து நன்மதிப்பைப் பெற்று வரும் முதல்-அமைச்சரின் புகழை கண்டு பொறுக்க முடியாத தி.மு.க. தலைவர் கருணாநிதி நல்ல முயற்சியை கேலியும், கிண்டலும் செய்துள்ளது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.