ஐதராபாத், ஆக. 5– ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத்தை 10 ஆண்டுகளுக்கு பொதுவான தலைநகராக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக்க ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர்ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–
ஐதராபாத் நகரை 10 ஆண்டுகளுக்கு பொதுவான தலைநகரமாக வைத்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆந்திராவில் புதிய தலைநகரை உருவாக்க கால அவகாசம் தேவை என்பதால் அதை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் ஐதராபாத் நகரை நிரந்தரமாக இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக ஏற்க முடியாது. அது போல ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசம் ஆக்கும் திட்டத்தையும் எங்களால் ஏற்க இயலாது. தலையே போனாலும் ஐதராபாத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
ஐதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கே சொந்தமானது. ஐதராபாத் இல்லாத மாநிலத்தை நினைத்து பார்க்க இயலாது. ஐதராபாத் இல்லாத மாநிலம் எங்களுக்கு தேவை இல்லை.
ஐதராபாத் விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை. ஐதராபாத்தை யூனியன் பிரதேசம் ஆக்க நினைத்தால், என் பிணம் மீதுதான் அது நடக்கும். எக் காரணம் கொண்டும் ஐதராபாத்தை விட்டு கொடுக்கவே மாட்டோம்.
தெலுங்கானாவில் உள்ள ஆந்திரா அரசு ஊழியர்கள் வெளியேற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இரு மாநில அரசு ஊழியர்களும் தமது அரசுகளுக்குரிய பணியை செய்ய வேண்டும் என்றே சொன்னேன்.
தெலுங்கானா பகுதி பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே தெலுங்கானா பகுதியில் முதலீடு செய்ய வருமாறு தொழில் அதிபர்களை அழைக்கிறேன்.
புதிய தொழில்கள் தொடங்க ஏற்ற சூழல் தெலுங்கானா பகுதியில் அதிகம் உள்ளது. அது போல தெலுங்கு பட உலகம் தொடர்ந்து ஐதராபாத்தில் செயல்படும். சினிமா தொழில் மேலும விரிவுபடுத்தப்படும்.
தெலுங்கானா பகுதி மக்கள் 1956–ம் ஆண்டு முதல் வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு நிறைய அநீதி இழைக்கப்பட்டது. இனி தெலுங்கானா மக்கள் முகத்தில் நான் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன்.
வேலைவாய்ப்பு, தொழில், கல்வி என பல விஷயங்களிலும் புறக்கணிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு இனி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இனி தெலுங்கானா மக்கள் உரிய மரியாதையுடன் வாழ்வார்கள். அவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது.
எனக்கு முதல்–மந்திரி பதவி மீது ஆசை இல்லை. எனவே தெலுங்கானா மாநிலத்தை மேம்படுத்தும் குழுவுக்கு தலைமை ஏற்கவே விரும்புகிறேன்.
தெலுங்கானா பற்றி பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகே எங்கள் கட்சியின் அடுத்த நிலை பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.