Home இந்தியா தமிழக அரசின் முடிவினால் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்: கருணாநிதி

தமிழக அரசின் முடிவினால் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்: கருணாநிதி

544
0
SHARE
Ad

சென்னை, ஆக. 14- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

karunanidhi -PTIகழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தை தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால் தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது.

#TamilSchoolmychoice

முக்கியமான இந்த நான்கு வழி பறக்கும் சாலைத் திட்டம் என்னதான் ஆயிற்று என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பெர்னாண்டசிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “மாநில அரசு அதன் நிலை பற்றித் தெளிவாகத் தெரிவிக்காததாலும், நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலே ஏற்படும் தாமதத்தைப் போக்காததாலும் வங்கிகள் இந்தத் திட்டத்திற்காக நிதி அளிக்க மறுத்து வருகின்றன” என்று சொல்லியிருக்கிறார்.

இந்தத் திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு விதித்த தடையை நீக்கக்கோரி மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கு 12-8-2013 அன்று விசாரணைக்கு வந்தபோது, நீதியரசர் அகர்வால், நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு “இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அவர்கள் அவகாசம் கேட்டு வருகின்றனர்.

இது கண்டிக்கத்தக்கது. வரும் 19ஆம் தேதி இறுதிக் கெடு விதிக்கப்படுகிறது. அன்று அரசு பதில் அளிக்க வேண்டும். தவறினால் நாங்களே முடிவெடுப்போம்” என்று கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தத் திட்டம் செயலாக்கம் பெற்றால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்; ஒவ்வொரு நாளும் தற்போது 30 விபத்துகள் அங்கே நடைபெறுகின்றன; இந்தப் புதிய திட்டம் வருமானால், இந்த விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதைப் போலவே வியாபார நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் துறைமுகத்திற்குச் செல்வதற்கும், தங்கள் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் இந்தப் புதிய திட்டம் மிக மிக அத்தியாவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு சகல தரப்பினரும், அதிகாரிகளும், அனைத்து நாளேடுகளும், மத்திய அரசும் இந்தப் புதிய திட்டம் எவ்வளவு அவசர அவசியமானது என்று சொல்கின்ற நேரத்தில்; தமிழக அரசின் முடிவு காரணமாக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட ஒரு திட்டம் இன்றைக்கு முடங்கிக் கிடக்கின்றது.

தமிழக அரசின் இத்தகைய போக்கினைக் கண்டிக்கும் வகையிலும், மதுரவாயல் – துறைமுகம் சாலைப் பணிகளுக்குத் தமிழக அரசு நியாயமின்றி விதித்துள்ள தடையை உடனடியாக நீக்கிக் கொண்டு, அந்தத் திட்டத்திற்காக மாநில அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டக் கழகங்களின் சார்பில் 17-8-2013 அன்று கழக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தலைமையில் நெற்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.