Home கலை உலகம் முதல் நாள் திரை விமர்சனம்: “ராஜா ராணி” – நவீன ‘மௌனராகம்’;

முதல் நாள் திரை விமர்சனம்: “ராஜா ராணி” – நவீன ‘மௌனராகம்’;

1229
0
SHARE
Ad

Raja-Rani-Slider26 செப்டம்பர் – அட்லீ என்ற புதுமையான பெயர் கொண்ட அறிமுக இயக்குநர், கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட பரபரப்பு மிகுந்து செய்திகளுடன் உருவாக்கி வந்த படம் ராஜா ராணி.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தின் காட்சிகளை வைத்துத்தான் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் உண்மையிலேயே திருமணம் என கொஞ்ச காலத்திற்கு முன்னால் புரளிகள் கிளப்பி விடப்பட்டு தமிழக சினிமா உலகத்தை பரபரப்புக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னத்தின் சிறந்த படைப்புக்களுள் ஒன்றான பழைய மௌனராகம் படத்தின் ஒரு பகுதியை அப்படியே உருவி எடுத்து, அதற்கு நவீன பூச்சுக்கள் கொடுத்து, படத்தின் கதாபாத்திரங்கள் கணினி மற்றும் கால்செண்டர் எனப்படும் வாடிக்கையாளர் தொலைபேசி தொடர்புத் துறைகளில் வேலை செய்பவர்கள் என காட்சிகளை அமைத்து உருவாக்கி இருக்கின்றார்கள்.

சில இடங்களில் மணிரத்னத்தின் மற்றொரு படமான அலைபாயுதே படத்தின் கதையும் நமது நினைவுக்கு வருகின்றது.

முக்கால் வாசிப் படம் வரை ஓரளவுக்கு ரசிக்கும் படி எடுத்திருக்கும் இயக்குநர் படத்தின் இறுதிக் கால் பகுதியில் சொதப்போ சொதப்பு என்று சொதப்பி விட்டார். ஆர்யாவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று நமக்கு நன்கு தெரிந்துவிடுகின்றது என்பதால், படத்தின் இறுதிக் காட்சிகளில் எந்தவித சுவாரசியமோ, பரபரப்போ இல்லாமல் போகின்றது.

படத்தின் கதை

Raja-Rani-Jay-Nayan-Featureஜோன் என்ற ஆர்யாவுக்கும் ரெஜினா என்ற நயன்தாராவுக்கும் இடையில் நடக்கும் திருமணத்தோடு படம் தொடங்குகின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் பிடிக்காமல், வேண்டா வெறுப்பாகத்தான் திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்பது அவர்களின் கண் ஜாடைகளிலும், உடல் மொழிகளிலும் நமக்கும் புரிந்து விடுகின்றது.

ஆனால், நயன்தாரா தனது அப்பா சத்யராஜூவின் வற்புறுத்தலுக்காக கல்யாணம் செய்து கொள்கின்றார் என்பதை வலுவான கதையமைப்புடன் காட்டிய இயக்குநர், ஆர்யா ஏன் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்கின்றார் என்பதைக் காட்டவில்லை. அதனால் பல இடங்களில் ஏன் ஆர்யா அப்படி நயன்தாராவை வெறுப்பேற்றும்படி, எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கின்றார் என்பது நமக்கும் விளங்கவில்லை.

ஏன் நயன்தாரா வேண்டா வெறுப்பாக கல்யாணம் செய்கின்றார் என்பதைக் காட்ட அவருடைய பழைய காதல் கதை காட்டப்படுகின்றது. அந்தப் பகுதிகள் அப்படியே நமக்கு பழைய மௌனராகம்’ நினைவுகளை மீட்டுகின்றன.

பழைய காதலனாக வரும் ஜெய் கதாபாத்திரத்தை ஒரு பயந்தாங்கொள்ளி, கோணங்கித்தனம் கொண்டவராக மாற்றியமைத்திருக்கின்றார்கள்.

ஆனால், அவர்தான் படத்திலேயே மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரின் திட்டுதல்களையும், கலாய்ப்புக்களையும் கண்டு அவர் அஞ்சுவதும், புலம்புவதும் வெகு இயல்பாக இருக்கின்றது.

படத்தின் சிறந்த பாகம் என்றால் ஜெய் வரும் பகுதிகள்தான் என்று சொல்லலாம். வித்தியாசமாகவும், வெகு இயல்பாகவும் எடுத்திருக்கின்றார்கள்.

நயன்தாராவின் பழைய காதல் கதை முடிந்தவுடன், ஆர்யாவுக்கும் ஒரு பழைய காதல் இருந்தது என்று சந்தானம் நயன்தாராவிடம் கதை சொல்ல ஆரம்பிக்கின்றார்.

ஆனால், அந்தக் காதல் கதையில் எந்தவித சுவாரசியமும், திருப்பங்களும் இல்லை. வழக்கமான, பார்த்தவுடன் பெண்ணைப் பிடிப்பது பின்னர் சுற்றிச் சுற்றி வருவது என அதே பழைய பாணிதான்.

ஒரே ஆறுதல்! ஆர்யாவின் முன்னாள் காதலியாக வரும் நஸ்ரியா!

Raja-Rani-Nasria-Aryaநேரம் படத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தவர், இதில் இளைமை துள்ளும் துடிப்பான பெண்ணாக நடித்திருக்கின்றார். ஆரம்பக் காட்சியிலேயே, அவர் இரவுநேர உடையுடன் காலையில் எழுந்து துள்ளாட்டம் போடுவதும், வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கும் ஆர்யாவையும், சந்தானதையும் பார்த்ததும் வெட்கப்படுவதும் அழகு.

இனி நமது இளைய கதாநாயகர்களின் படங்களுக்குத் தேர்வாக நஸ்ரியாத்தான் இருப்பார் என உறுதியாகக் கூறலாம்.

இரண்டு காதல் கதைகளும் முடிந்ததும், படத்தின் சுவாரசியமும் போய்விடுவதால், அதன்பின்னர்  ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் நடக்கும் இறுதிக் கட்டக் கதையில் நமக்கும் கொட்டாவி வருகின்றது.

வழக்கம்போல், நயன்தாரா நாடுவிட்டுப் போகின்றார் என்றும், விமான நிலையத்தில் பிரிவு என்றும் எடுத்திருக்கின்றார்கள். அங்கே மீண்டும் ஜெய்யைக் காட்டும் போது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால், ஜெய்யின் ஆரம்பக் கட்ட கதாபாத்திரத் தன்மையையே கெடுக்கும் வண்ணம் காட்சிகள் அமைத்திருக்கின்றார்கள்.

தோல்விக் காதலுக்கும் பின்னரும் இன்னொரு காதல் தொடரலாம் என சுபமாக முடித்து ஆர்யாவையும், நயன்தாராவையும் கடைசியில் ஒன்று சேர்த்து வைத்து படத்தை முடித்திருக்கின்றார்கள்.

நிறைகள்

Raja-Rani-Stillதுல்லியமான ஒளியமைப்பும், வித்தியாசமான காட்சிக் கோணங்களும் இயக்குநரிடம் விஷயம் இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றன.

ஜெய்தான் படத்தின் பலம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான நகைச்சுவையால் திரையரங்கையே கலகலக்க வைக்கின்றார்.

வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும் பிரச்சனைகளை நன்கு விலாவாரியாக ஆராய்ந்து சுவாரசியமான காட்சிகளாக அமைத்திருக்கின்றார்கள்.

அதிலும் நயன்தாராவின் தோழிகள் அழைத்து ஜெய்யைக் கலாய்ப்பது குபீர் சிரிப்பை வரவழைக்கின்றது. ஜெய்யின் கூடவே நண்பராக வரும் சத்யனும் நம்மைச் சிரிக்க வைக்கின்றார்.

இவர்கள் இருவரின் நகைச்சுவையில் சந்தானத்தின் நகைச்சுவை கொஞ்சம் அமுங்கி விட்டது என்றுதான் கூறவேண்டும்.

படத்தின் இன்னொரு பலம் படத்தின் இரண்டு கதாநாயகிகள். நயன்தாரா சேலைகளில் பாந்தமாக வந்து தனது அழகாலும் நளினத்தாலும் கவர்கின்றார். ஆனால் குட்டைப் பாவாடையுடன் வரும்போதுதான் கண்களை உறுத்துகின்றது. பூசி மெழுகினாற்போல் சற்று பெருத்து தெரிகின்றார்.

நஸ்ரியாவும் இயல்பான அழகால், உடல் மொழியால் கவர்கின்றார். அவர் பல் துலக்கிக் கொண்டே, சற்றே நைட்டியைத் (இரவு ஆடை) தூக்கிவிட்டுக்  கொண்டு, காலழகு தெரிய போடுகின்ற ஆட்டமும் கவர்கின்றது. ஆனால், அவருக்கும் ஆர்யாவுக்கும் இடையிலான காதலைப் பற்றிக் கூறுகின்ற கதைப்jபகுதியைக் கையாண்ட விதத்தில் இயக்குநர் வித்தியாசமாக சிந்தித்திருக்கலாம். பழைய சினிமா பாணியையே கையாண்டிருக்கின்றார். படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் புரியும்!

படத்தின் இன்னொரு பலம் சத்யராஜ். நல்ல அப்பாவாக, மகள் கேட்டதையெல்லாம் செய்து கொடுக்கும் அப்பாவாக வந்தாலும், மகள் பீர் வாங்கிக் கொடுத்து குடிப்பது என்பதெல்லாம் கொஞ்சம் நெருடுகின்றது.

குறைகள்

ஜெய் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், இது போன்ற கால்செண்டர்களில் பணியாற்றுபவர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுத்துவிட்டுத்தான் அவர்களை வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு பதில் சொல்லும் வேலைக்கு அனுப்புவார்கள் என்பதை யாரும் இயக்குநருக்கு சொல்லவில்லை போலும்.

இந்த அளவுக்கு கோமாளித்தனமாக ஒருவர் வாடிக்கையாளர் புகார்களைக் கையாள்வாரா என்பது சந்தேகமே! ஆயினும் அந்த பயந்தாங்கொள்ளித் தனமும், கோணங்கித் தனமும்தான் படத்தின் நகைச்சுவைக்கு உதவியிருக்கின்றது என்பதோடு, ஜெய்யின் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்க்கின்றது.

ஆனால், வழக்கம்போல் ஜெய் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார், அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்றெல்லாம் சொல்லிவிட்டு படத்தின் இறுதிக் காட்சியில் மீண்டும் காட்டுகின்ற விதத்தில் இயக்குநர் சொதப்பி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படுவதற்கு நேர்மாறாக ஜெய், இறுதிக் காட்சிகளில் நடந்து கொள்வதும் அவரது கதாபாத்திரத் தன்மையைச் சிதைக்கின்றது.

படம் முழுக்க குடிப்பது போன்ற காட்சிகளே வருவது என்ன கலாச்சாரமோ தெரியவில்லை. அப்பா சத்யராஜ் பீர் குடிக்கின்றார் என்றால் மகள் நயன்தாராவும் மதுபானக் கடைக்கு தோழிகளோடு சென்று குடிக்கின்றார்.

கணவராக வரும் ஆர்யாவும் ஒவ்வொரு நாளும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகின்றார். தன் பங்குக்கு சந்தானமும் குடித்து விட்டு ரகளை செய்கின்றார். பின்னர் ஆர்யாவும் சந்தானமும் நண்பர்களுடன் டாஸ்மாக் சென்று அங்கேயும் குடிக்கின்றார்கள்.

நண்பர்கள் குடித்து விட்டு ஆடும் பாட்டும் வழக்கம்போல் உண்டு.

இப்படியாக குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை படம் முழுக்க திரையின் ஓரத்தில் ஓடவிட்டுக் கொண்டே படத்தையும் ஓட்டியிருக்கின்றார்கள்.

மொத்தத்தில்,

நயன்தாராவுக்காகவும், நஸ்ரியாவுக்காகவும், ஜெய்க்காகவும் ஒருமுறை ராஜா ராணி படத்தைப் பார்த்து வைக்கலாம்!

-இரா.முத்தரசன்