பெட்டாலிங் ஜெயா, அக் 10- தாம் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான புலன் விசாரணையில் காலங்கடத்துவது ஏன் என்று மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு மாறாக, காவல் துறையினர் தம்மிடம் புலன் விசாரனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
“நான் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக முழு அளவிலான புலன் விசாரணை நடத்தப்படும் என ஐஜிபி செய்தியாளர் கூட்டத்தில் உறுதியளித்தார். எனினும், இன்றுவரை எவரும் கைது செய்யப்படவில்லை” என்று சஞ்சீவன் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமானுக்கு தாம் அழைக்கப்பட்டதாகவும் சஞ்சீவன் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை புலன் விசாரணை செய்வதற்குப் பதிலாக, காவல் துறையினர் என்னிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று சஞ்சீவன் கூறினார்.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி நெகிரி செம்பிலான் பஹாவில் ஒரு சமிக்ஞை விளக்கிற்கு அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சஞ்சீவன் சுடப்பட்டார்.
அச்சம்பவத்தில் அவரது விலாவில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சஞ்சீவன் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார்.