ஜோர்ஜ் டவுன், அக் 10 – மலாக்கா மாநில ஜசெக தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களது பதவி விலகல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் கட்சி தலைமைக்குத் தெரிவிக்கவில்லை என்று ஜசெக தலைமைச்செயலாளரும், பினாங்கு மாநில முதல்வருமான லிம் குவான் எங் தெரிவித்தார்.
இவ்விருவரது பதவி விலகல் குறித்து ஜசெக தேசியத் தலைவர் கர்ப்பால் சிங்கிடம் தான் பரிசீலித்ததாகவும், அவரும் அதிகாரப்பூர்வ தகவலைப் பெறவில்லை என்றும் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
அவர்கள் இருவரிடமிருந்தும் பதவி விலகலுக்கான அதிகாரப்பூர்வ கடிதத்தைப் பெற்ற பின்னரே, எதுபற்றியும் கருத்துரைக்க முடியும் என்று லிம் குவான் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மலாக்கா மாநில ஜசெக தலைவரும், டூயோங் சட்டமன்ற உறுப்பினர் கோ லியோங் சன் (படம்) தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.
மலாக்கா மாநில முதல்வர் இட்ரிஸ் ஹாரோனை தான் பாராட்டியதால் அது ஜசெக உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதனால் தான் பதவி விலகுவதாகவும் கோ லியோங் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மலாக்கா மாநில ஜசெக துணைத்தலைவரும், பாச்சாங் சட்டமன்ற உறுப்பினருமான லிம் ஜாக் வோங்கும் பதவி விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.