கோலாலம்பூர், அக் 14 – பினாங்கு மாநில மக்கள் ஓசை செய்தியாளரான செ.குணாளன் அவர்களின் இரண்டாவது வெளியீடான ‘முள் மரங்கள்’ என்ற புதுக்கவிதை நூல், எதிர்வரும் அக்டோபர் 20 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பட்டர்வொர்த் டேவான் ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில், மாலை மணி 5:30 க்கு வெளியீடு காணவிருக்கிறது.
இவ்விழாவில், முனைவர் ஒளவை நடராசன், முன்னாள் துணைவேந்தர் தஞ்சை பல்கலைக்கழம் (தமிழ் நாடு) , டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம் (NLFC), பெ.இராஜெந்திரன் தலைவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கவிருக்கின்றனர்.
இவ்விழா குறித்து அதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:-
“சமூகம், அரசியல், ஆலயங்கள், தமிழ் இனத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவுகள் குறியீடாக, நவீன காலத்திலும் உரிமைக்கு போராட்டம் நடத்தும் நம் நிலைமை, தலைவர்களுக்கு கவிதை. இன்னும் பலவகையக நிகழ்ச்சிகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து புதுக்கவிதையில் வரையப்பட்டுள்ள இப்புத்தகத்தின் கவிதைகள் முற்றிலும் சமூகத்தையே வட்டமிடும் கவிதைகளாகும்.”
“இந்த நூலை படித்து கவிதையில் உள்ள குறியீடுகளில் ஆழமாக நுழைந்து பயணம் செய்தால் தமிழனின் வரலாற்று குறிய பல செய்திகளை காணமுடியும், இதில் மிக முக்கியமான அம்சங்கள் என்னவென்றால் மொழி, இனம், பண்பாடு, தமிழரின் கலாச்சாரம், தமிழர்களின் விழாக்கள் இன்னும் பலவகையான மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட இன பண்பாடுகள் மீட்கப்படவில்லையே என்ற கோபமும், கொந்தளிப்பும் இந்த கவிதை புத்தகத்தில் நிறையவே காணலாம்.”
“புத்தகத்தில் உள்ள 93 கவிதைகளும் தமிழ் இனத்திற்கு வழங்கப்படும் தீர்வோ, தீர்ப்போ அல்ல, ஆனால் புதிய தலைமுறைகளும், சமூக ஆர்வலர்களும் நமக்கு தேவை என்ன என்பதை மீண்டும் மீண்டும் பதியம் போட்டு நம் அடுத்த தலைமுறையையாவது சரியாக முறையாக செம்மைப்படுத்த முடியுமா என்று சிந்திக்கத் தூண்டும் கவிதைகளின் சாரமாகவே இப்புத்தகத்தின் கவிதைகள் காணப்படும்.”
“இது ஒரு வரலாற்று காவியம், வாழ்வின் அடித்தளம், சமூகத்தின் அவலங்களை படம் பிடித்து பத்திரப்படுத்தி வைக்கும் கடமை உணர்வு என்று நாம் கூறமுடியும். பொது வாழ்க்கையில் கால் பதித்துள்ள சமூக, அரசியல் தலைவர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் முள் மரங்கள் எனும் புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வந்து கலந்து சிறப்பிக்கவும்.” இவ்வாறு நூல் வெளியீட்டு விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.