லண்டன், நவம்பர் 11- உலகெங்கும் உள்ள சீக்கியர் இனத்தில் முதல் 100 இடத்தைப் பெறும் சீக்கியர்கள் பட்டியலின் முதல் பதிப்பு நேற்றிய முந்தினம் இரவு இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அதில் சமகாலத்தைச் சேர்ந்தவரும் செல்வாக்கும் மதிப்பும் மிக்கவராக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சீக்கிய டைரக்டரி மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் 81 வயதான மன்மோகன் சிங் சிந்தனையாளர் மற்றும் அறிஞர் என்று எல்லோராலும் பாராட்டப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது யூகிக்கும் தன்மையும், கல்வி கேள்வித்திறமைகளையும் போல் விடாமுயற்சியும், ஒரு செயல் குறித்த அவரது அணுகுமுறையும் அனைவராலும் பாராட்டப்படுகின்றது என்று இந்தியப் பிரதமரைப் பற்றிய குறிப்பு ஒன்றும் அந்தப் பட்டியலில் காணப்படுகின்றது.
இந்தியத் திட்ட ஆணைத்தின் துணைத்தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா (69) திறமை வாய்ந்த சீக்கியர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சீக்கியர்களின் பொற்கோவில் உள்ள அமிர்தசரசில் இயங்கிவரும் ஸ்ரீ அகாலிதள சாஹிப் பிரிவின் தற்போதைய மதத் தலைவரான ஜதேதார் சிங் சாஹிப் கியானி குர்பச்சன் சிங் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதன்பின் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக உள்ள பிரகாஷ் சிங் பாதல் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளதாக அந்தப் பட்டியல் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அஜய்பால் சிங் பங்கா 8-வது இடத்திலும், இங்கிலாந்தின் ராயல் நீதிமன்றத்தின் நீதிபதியான ராபிந்தர் சிங் 9-வது இடத்திலும்,இந்தியப் பிரதமரின் மனைவி குர்சரண் கவுர் 13-வது இடத்திலும், பஞ்சாபின் துணை முதலமைச்சரும், சிரோமணி அகாலிதளக் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் 14-வது இடத்திலும் உள்ளனர்.