மணிலா, நவம்பர் 11- பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சோகம் ஏற்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் 30 ஆண்டுகளாக இல்லாத வகையில் மணிக்கு 275 கி.மீ வேகத்தில் ஹையான் சூறாவளி புயல் தாக்கியது.
மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள லெதே மாகாணத்தை புயல் தாக்கியது. இதில் மாகாணத்தின் 80 சதவீதம் சேதமடைந்துள்ளது. ஹையான் புயல் காரணமாக கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்துக்கு சீறி பாய்ந்தன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக லெதே மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள அனைத்து ஊர்களும் முற்றிலுமாக கடலால் அரித்து செல்லப்பட்டு விட்டது. சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டன. மரங்கள், மர வீடுகள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.தொலை தொடர்பு கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்தன.
இந்த புயலில் ஆரம்பத்தில் 100 பேர் பலியானதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், மாலைக்குள் 1200 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் லெதே மாகாணத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை பலியானதாக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு அதிகாரிகளுடன் மாகாண கவர்னர் அவசர ஆலோசனை நடத்தி மீட்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிட்டார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வீச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. முகாம்களில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தஞ்சம் அடைந்துள்ளனர்.
பிலிப்பைன்சை தாக்கியது புயல்களில் 5வது பிரிவை சேர்ந்த கொடூர சூறாவளி என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மணிலாவில் இருந்து சுமார் 580 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியை ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும் போது சுனாமி தாக்கி முற்றிலுமாக அழிந்துள்ளதை போன்று உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்துள்ளனர்.
இதுகுறித்து தாக்லோபான் நகர நிர்வாகி டெக்சான் ஜான் கூறுகையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும் மீட்பு பணிகளை செய்ய இயலாத நிலை காணப்படுகிறது. வீடுகளிலும், தெருக்களிலும் குவியல் குவியலாக மனிதர்கள் இறந்து கிடக்கும் கோர காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
உடல்களை மீட்கும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது என்றார்.உலக உணவு திட்ட அதிகாரி கூறுகையில், ஐ.நா உதவியுடன் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவசர கால தொலைபேசிகளை நிறுவவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பிலிப்பைன்சை தாக்கியுள்ள ஹையான் புயலால் ஏற்பட்டுள்ள சேதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.