சான் ஜோஸ், நவ 22- கைத்தொலைப்பேசி வர்த்தகத்தில் உலகளவில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகும். 300 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட இந்தத்துறையில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இரண்டு நிறுவனங்களுமே ஒன்றுடன் ஒன்று கடும் போட்டியினை நடத்தி வருகின்றன.
இந்த முறை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் ஜோஸ் நீதிமன்றத்திலேயே அந்நிறுவனம் பதிவு செய்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஐ-போன் மற்றும் ஐ-பாட் இல் உள்ள அம்சங்களை சாம்சங் நிறுவனம் பயன்படுத்தியுள்ளன என்பதுவே வழக்கின் சாராம்சம் ஆகும்.
முதலில் இந்த வழக்கினை விசாரித்திருந்த நீதிபதி 1.05 பில்லியன் டாலர் ஆப்பிள் நிறுவனத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்புக் கூறினார். அதன்பின்னர் இந்த வழக்கு மறுவிசாரணை செய்யப்பட்டு 450 மில்லியன் டாலருக்கு நஷ்டஈடு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் மீது அளிக்கப்பட்ட மேல்முறையீட்டின் விளைவாக சமீபத்திய விசாரணை நடைபெற்று சாம்சங் நிறுவனம் 290 மில்லியன் டாலர் நஷ்டஈடு அளிக்கப்பட வேண்டும் என்பது முடிவாகியுள்ளது.
இந்தத் தீர்ப்பின்மீதும் சாம்சங் மறுவிசாரணை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தீர்ப்பானது ஆப்பிளின் காப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங்கின் 26 மாதிரிகளில் 13-ஐ உள்ளடக்கியது ஆகும். விற்பனை சந்தையில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங்கின் தற்போதைய தொழில்நுட்ப சாதனங்கள் ஆப்பிளின் தொழில்நுட்பத்தை ஒத்துள்ளது என்ற மற்றொரு குற்றச்சாட்டிற்கான விசாரணை வரும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.