கோலாலம்பூர், ஜன 2 – விலையேற்றத்திற்கு எதிராக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட பேரணியை “ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம்” என்ற வருணித்த அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுக்க சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) அமைப்பு முடிவு செய்துள்ளது.
சுமார் 10,000 ஆதரவாளர்களுக்கும் மேல் கூடிய அப்பேரணியை ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்களில் ஒன்றான சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து சொலிடேரிடியின் பிரச்சார இயக்குநர் எடி நூர் ரிட்வான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசாங்கத்தை கவிழ்க்கும் பேரணி என்று இதை காவல்துறை வர்ணித்துள்ளது. ஆனால் பேரணி அமைதியாகத் தானே நடைபெற்றது. அரசாங்கம் கவிழ்க்கப்படவில்லையே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “எங்கள் அமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த களங்கத்தைத் துடைக்க அரசாங்கத்தின் மீது விரைவில் வழக்குத் தொடுப்போம்” என்றும் எடி கூறியுள்ளார்.