Home நாடு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் கடைசி 6 பேர் விடுதலை!

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் கடைசி 6 பேர் விடுதலை!

566
0
SHARE
Ad

ISA-logo-440-x-215தைப்பிங், ஜனவரி 5 – தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தைப்பிங் கமுந்திங் தடுப்புக் காவல் முகாமில் வைக்கப்பட்டிருந்த கைதிகளில் அறுவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அவர்களில் மூவர் மலேசியர்கள், இருவர் இந்தோனிசியர்கள், ஒருவர் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

இதன்மூலம், நாட்டின் சரித்திரத்தில் கறுப்பு அத்தியாயமாக கருதப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் ஒரு முடிவுக்கு வருகின்றது என்பதோடு, இனி விசாரணையின்றி, காலவரையின்றி,  காவலில் இருக்கின்ற கைதிகள் என்ற நிலையில் இனி யாரும் இருக்கமாட்டார்கள்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக, பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் என்ற பெயரில் மாற்று சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகளில் கடைசி ஆறு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் டாக்டர் அஹ்மட் சாஹிட் நேற்று அறிவித்திருந்தார்.

அந்த கைதிகள் அறுவரும் தடுப்புக் காவல் முகாமிலிருந்து உற்சாகத்துடன் வெளியேறியதோடு அங்கிருந்த காவல் அதிகாரிகளுடன் அந்த சரித்திரபூர்வ தருணத்தை நினைவுகூரும் வண்ணம் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

தங்களின் விடுதலைக்காக அரசாங்கத்திற்கு அந்த அறுவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். தாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தங்களை கவனித்துக் கொண்ட அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சபா டாருல் இஸ்லாமியா என்ற பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த அறுவரும் கடந்த 14 நவம்பர் 2011ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.