பாங்காக், ஜன 16- தாய்லாந்தில் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவியிறக்கம் செய்யப்பட்டு பொதுத் தேர்தல் மூலம் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் தாக்சுபன் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் போராட்டம் துவங்கியது. இந்தப் போராட்டத்தின் விளைவால் வரும் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இங்க்லக் காபந்து முற்றிலும் பதவி விலகினால்தான் தேர்தலில் ஈடுபட முடியும் என்று கூறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனால் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று இங்க்லக் கூறி வருகிறார்.
தாய்லாந்தில் அரசுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. நேற்று காலை, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பேர் குண்டடி பட்டு காயம் அடைந்தனர். ஒரு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் வீடு வெடிகுண்டு வீச்சில் சேதம் அடைந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று 37 எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய இடைக்கால பிரதமர் இங்க்லக், நிருபர்களிடம் கூறுகையில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து தேர்தலை தள்ளி வைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. திட்டமிட்டபடி பிப்ரவரி 2-ம் தேதி தேர்தல் நடைபெற்றே தீரும்.