Home தொழில் நுட்பம் ஆஸ்கார் விருதளிப்பில் ட்விட்டர் தொழில் நுட்ப உலக சாதனை!

ஆஸ்கார் விருதளிப்பில் ட்விட்டர் தொழில் நுட்ப உலக சாதனை!

523
0
SHARE
Ad

Ellen Degeneres 300 x 200மார்ச் 4 – உலகமெங்கும் மாறிவரும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பங்களை மீண்டும் ஒருமுறை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமான புதுமையான காட்சியொன்று நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவின் போது அரங்கேறியதை அந்த நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்தவர்கள் அனுபவித்திருப்பார்கள்.

நேற்று நடந்த ஆஸ்கார் நிகழ்ச்சியை முன்னின்று தொகுத்து வழங்கியவர் எல்லன் டிஜெனரஸ் (Ellen DeGeneres)என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர். பிரபலங்களைச் சந்திக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் அவரது நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்கள் உலகப் பிரசித்தம். அதற்காக அவருக்கு கோடிக்கணக்கான இரசிகர்கள் உண்டு.

நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போதே மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த எல்லன் (மேலே படம்) நேரே முன்வரிசையில் அமர்ந்திருந்த மெரில் ஸ்ட்ரீப் (Meryl Streep) என்ற பிரபல நடிகையிடம் மெரில் நாம் இருவரும் இப்போது ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

கைத்தொலைப்பேசியின் மூலம் நம்மை நாமே சொந்தமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படத்திற்குத்தான் “செல்ஃபி” (selfie) என்ற புதிய வார்த்தை ஆங்கிலத்தில் சூட்டப்பட்டிருக்கின்றது.

மெரில் ஸ்ட்ரீப்புடன் இணையாக நின்று புகைப்படம் எடுக்க எல்லன் முயன்ற வேளையில் பின்வரிசையில் இருந்த மற்றொரு பிரபல நடிகையான ஜூலியா ராபர்ட்சும் வந்து இணைந்து கொண்டார். அருகில் அமர்ந்திருந்த கெவின் ஸ்பேசி, பிராடி கூப்பர், பிராட் பிட் போன்ற மற்ற ஹாலிவுட் பிரபலங்களையும் எல்லன் அழைக்க அனைவரும் இணைந்து எல்லனின் கைத்தொலைபேசியில் மூலம் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.

Ellen Oscar Photo 440 x 215(அந்த புகைப்படத்தைத்தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள்!)

“நாம் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை நான் இப்போது ட்விட்டரில் போடப் போகின்றேன். அதை எல்லாரும் ரி-ட்விட் (செய்தியையோ, புகைப்படத்தையோ மீண்டும் மற்றவர்களுக்கு அனுப்புவது)  செய்யுங்கள். நாமும் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் இரசிகர்களும் செய்யும் இந்த புகைப்படத்தின் ரி-ட்விட் உலக சாதனையை எட்டுகிறதா என்று பார்ப்போம்” என்றும் தொடர்ந்து எல்லன் டிஜெனரஸ் அறிவித்தார்.

அவ்வளவுதான் அந்த அபூர்வமான புகைப்படத்தை உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்கள் உடனடியாக ரி-ட்விட் செய்ய அடுத்த அரை மணி நேரத்தில் அந்தப் புகைப்படத்தின் ரி-ட்விட்டுகளின் எண்ணக்கை 779,295 ஆக உயர்ந்துவிட்டது.

ஆஸ்கார் விருதளிப்பு நடந்து கொண்டிருந்த போதே அடுத்த ஒருமணி நேரத்தில் இந்த புகைப்படத்தின் ரி-ட்விட்டுகள் ஒரு மில்லியனை எட்டிவிட்டதாக நிகழ்ச்சி அறிவிப்பாளர் எல்லன் அறிவித்தார். இது ஒரு உலக சாதனையாகும்.

ஒபாமாவின் உலக சாதனை முறியடிப்பு

எல்லனின் புகைப்படம் ரி-ட்விட்டு செய்யப்பட்ட சாதனை மூலம் இதற்கு முன்னால் அதிகமாக ரி-ட்விட் செய்யப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றிருந்த ஒபாமாவின் புகைப்படம் செய்திருந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Obama & Wife Twitter photo 300 x 200

(இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகமாக ரி-ட்விட் செய்யப்பட்ட ஒபாமாவின் புகைப்படம்)

இரண்டாவது தவணைக்கு அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பராக் ஒபாமா தனது மனைவியைக் கட்டிப் பிடித்தபடி மேலும் நான்கு வருடங்கள் என்ற வாசகங்களோடு ட்விட்டரில் அனுப்பிய புகைப்படம்தான் ஒரே நாளில் இதுவரை அதிகமாக ரி-ட்விட் செய்யப்பட்ட படம் என்ற சாதனையைப் பெற்றிருந்தது. ஒரே நாளில் 703,915 தடவைகள் ரி-ட்விட்டுகளை இந்தப் புகைப்படம் பெற்றது.

ஆனால், தற்போது எல்லன் அனுப்பிய புகைப்படம்தான் உலக சாதனையைப் புரிந்திருக்கின்றது.

ஆஸ்கார் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தபோது 2,070,132 தடவைகள் எல்லனின் புகைப்படம் ரி-ட்விட்டுகள் செய்யப்பட்டிருந்தது.

ட்விட்டரில் எல்லனைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 27 மில்லியனுக்கும் அதிகம் என்பது இன்னொரு கொசுறுத் தகவல்!

ட்விட்டர் போன்ற நட்பு ஊடகங்களின் மூலம் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தின் உதவியோடு என்னவெல்லாம் சாதிக்கலாம் – எப்படியெல்லாம் உலக மக்களை ஒரே கணத்தில் இணைக்கலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கின்றது, நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருதளப்பின்போது நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி!

-இரா.முத்தரசன்