Home வணிகம்/தொழில் நுட்பம் ஜோகூர் சுல்தானின் புதல்வர், சிங்கப்பூர் தொழிலதிபர் பீட்டர் லிம்முடன் இணைந்து பாதுகாப்பு நிறுவன வர்த்தகத்தில் முதலீடு!

ஜோகூர் சுல்தானின் புதல்வர், சிங்கப்பூர் தொழிலதிபர் பீட்டர் லிம்முடன் இணைந்து பாதுகாப்பு நிறுவன வர்த்தகத்தில் முதலீடு!

580
0
SHARE
Ad

Peter Lim SIngapore 440 x 215மார்ச் 15 – ஜோகூர் சுல்தானைத் தொடர்ந்து அவரது புதல்வரும் தற்போது வணிக பேரங்களிலும், முதலீடுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். சிங்கப்பூரின் பிரபல வணிகரான பீட்டர் லிம்மின் சோவரஸ் குழுமத்தோடு (Soverus Group) இணைந்து ஜோகூர் சுல்தானின் புதல்வரான துங்கு அப்துல் ரஹ்மான் உயர்நிலை அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கும் சிங்கப்பூர் நிறுவனமான சோவரஸ்  வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

அதன்படி துரித வளர்ச்சி அடைந்து வரும் ஜோகூரின் இஸ்கண்டார் பொருளாதாரப் பகுதியில் சிறந்த, நம்பிக்கையான பாதுகாப்பு சேவைகளை – ஆயுதங்களோடும் ஆயுதங்களின்றியும் வழங்கப்படும் பாதுகாப்பு சேவைகளுக்கான – வர்த்தகத்தில் அந்நிறுவனம் ஈடுபடும்.

கடந்த இரண்டு வருடங்களில் இஸ்கண்டார் பகுதியில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்துள்ள சிங்கப்பூர் வணிகப் பிரமுகராக சிங்கப்பூரியரான பீட்டர் லிம் திகழ்கின்றார்.

ரவுஸ்லி லிமிடெட் (Rowsley Ltd) என்ற நிறுவனத்தில் ஏற்கனவே பீட்டர் லிம்மும் ஜோகூர் அரச வம்சத்தினரும் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் ஜோகூர்பாரு நகரின் மையப் பகுதியில் 9.23 ஹெக்டர் பரப்பளவுள்ள மையமான நிலத்தில்10 பில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

இதே இரண்டு குழுமங்களும் இணைந்து மேற்கொண்டிருக்கும் மற்றொரு திட்டம் 2 பில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான நவீன தாம்சன் இஸ்கண்டார் (Thomson Iskandar) மருத்துவ மையமாகும்.

இவை தவிர ஃபாஸ்ட்ராக் இஸ்கண்டார் (FASTrack Iskandar) என்ற பெயரிலான கார் பந்தய நகரை உருவாக்கும் முதலீட்டிலும் பீட்டர் லிம் சம்பந்தப்பட்டிருக்கின்றார். இந்த திட்டம் 3.2 பில்லியன் ரிங்கிட் முதலீட்டில் உருவாகும் திட்டமாகும்.

இராணுவப் பின்னணியைக் கொண்ட ஜோகூர் சுல்தானின் புதல்வர் பாதுகாப்பு குறித்த அம்சங்களில் தனிப்பட்ட முறையில் ஆர்வம் கொண்டவராக இருப்பதால் தங்களின் இந்த கூட்டு வணிகம் வெற்றி பெறும் என்றும் பின்னர் மலேசிய அளவில் விரிவுபடுத்தப்படும் என்றும் பீட்டர் லிம் கூறியிருக்கின்றார்.

அபரிதமான வளர்ச்சி கண்டு வரும் இஸ்கண்டார் பொருளாதாரப் பகுதியில் பாதுகாப்பு சேவைகளுக்கு மிகப் பெரிய தேவை இருக்கின்றது என்றும் அதனால் இத்துறையில் நிறைய வணிக வாய்ப்புகள் இருப்பதாக தாங்கள் நம்புவதாகவும் லிம் தெரிவித்திருக்கின்றார்.

பீட்டர் லிம் சிங்கப்பூர் காவல் துறையில் 19 ஆண்டுகள் பணியாற்றி பல முக்கிய பதவிகளை வகித்தவராவார்.

2,217 சதுர கிலோ மீட்டர் பிரதேசமான இஸ்கண்டார் பொருளாதாரப் பகுதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட உட்கட்டமைப்பு, மின்சார சக்தி, போக்குவரத்து வசதிகள், சேவைகள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஜோகூர் மாநிலத்தின் மாபெரும் பொருளாதாரப் பிரதேசமாகும். சிங்கப்பூரைப் போன்று மூன்று மடங்கு பெரிய பிரதேசமாகும் இது.