மார்ச் 15 – காணாமல் போன மாஸ் MH 370 விமானத்தைத் தேடும் பணியில் இருந்து விலகிக் கொள்வதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. இன்று பிற்பகலில் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் விமானத்தைத் தேடுவது புதிய இரண்டு இடங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து தாய்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
இருப்பினும், தாய்லாந்து நாட்டின் நான்கு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் மலேசிய அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கும் தருணத்தில் அவை தேடுகின்ற கடமையில் மீண்டும் ஈடுபடும் என்றும் தாய்லாந்து சார்பாக அதன் கடற்படைத் தலைவர் அறிவித்துள்ளார்.
காணாமல் போன விமானத்தை தாய்லாந்தின் ஹட்ஜாய் நகரிலுள்ள ராடார் கருவிகளின் மூலம் அடையாளம் கண்டு அது குறித்த துல்லியமான தகவல்களை வழங்குவதில் தாய்லாந்து பெரும் உதவி புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது காணாமல் போன விமானத்தைத் தேடுவது இந்திய பெருங்கடலின் தென் பகுதியிலும் வடக்கே கசக்ஸ்தான் வரையிலும் நீண்டுள்ளதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருந்தார்.