இஸ்லமாபாத், மார்ச் 18 – பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியளரான முஷரப், அதிபராக பதவி வகித்தபோது கடந்த 2007–ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தார். அது தொடர்பாக தற்போது அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில், உயிருக்கு பாதுகாப்பில்லை என கூறி நீதிமன்றத்திற்கு வர முஷரப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், வருகிற 31–ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் வர வேண்டும். அல்லது அவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதனிடையே முஷரப் சார்பில் அவரது வழக்கறிஞர் அப்பாஸ் நக்வி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.
முஷரப்புக்கு கொலை மிரட்டல் உள்ளது. நாட்டில் சட்டம்–ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை பாகிஸ்தானில் தொடர்ந்து நடத்துவது சாத்தியமல்ல.
எனவே இந்த வழக்கு விசாரணையை நடுநிலையான இடத்தில் நடத்த வேண்டும். அதற்கு உகந்த நாடு துபாய்தான். எனவே முஷரப் வழக்கு விசாரணையை துபாய்க்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்