மும்பை, மார்ச் 18 – நீதிமன்றம் விடுவித்ததால், குஜராத் கலவரத்துக்கு நரேந்திர மோடி மீது இனி குற்றம் சுமத்த முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஐ.மு கூட்டணியில் இருந்து விலகி தே.ஜ கூட்டணிக்கு செல்ல முடிவு செய்துவிட்டதாக அப்போது தகவல் வெளியானது. ஆனால் இதை சரத்பவார் மறுத்தார்.
இந்நிலையில் மும்பையில் தனியார் தொலைக்கட்சிக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து, மோடியை நீதிமன்றம் விடுவித்தது. அதனால் பா.ஜ.க.பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது, குற்றம் சுமத்த முடியாது.
நீதிமன்றம் எதாவது கூறினால் அதை ஏற்க வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரசின் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு வேறு ஏதாவது தகவல் கிடைத்திருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது.
நீதிமன்ற தீர்ப்புப் படிதான் எனது கருத்தை தெரிவிக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் முதல்வராக இருந்து, எனது மாநிலத்தில் எதாவது நடந்தால் அதற்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இல்லை என கூற முடியாது. நான் நேரடியாக ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் முதல்வராக, உள்துறை அமைச்சராக, நிர்வாகியாக மக்களை காக்க வேண்டியது எனது பொறுப்பாகவே நினைக்கிறேன்.
குஜராத்தில் ஏற்பட்ட வளர்ச்சி ஒரு முதல்வரால் ஏற்பட்டதல்ல. சிமன்பாய் படேல் முதல் பலர் சிறந்த சேவை ஆற்றியுள்ளனர். எனக்கு நிகராக மோடியும் நல்ல தலைவர்தான் என சரத்பவார் கூறினார்.