Home நாடு MH370: விமானத்தின் கணினியில் பாதைகள் முன்பே மாற்றியமைக்கப்பட்டுள்ளன – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

MH370: விமானத்தின் கணினியில் பாதைகள் முன்பே மாற்றியமைக்கப்பட்டுள்ளன – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

512
0
SHARE
Ad

MH 370 Cockpit 440 x 215கோலாலம்பூர், மார்ச் 18 – மாயமான மலேசிய விமானம் தன் வழியில் இருந்து திரும்பியதற்கு, விமானிகள் அறையில் இருக்கும் வழி நடத்தும் கணினியில் செய்யப்பட்ட மாற்றம் தான் காரணம் என்று பிரபல தி நியூயார்க் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் நிர்ணயிக்கப்பட்ட தனது பாதையில் இருந்து மாறியதற்குக் காரணம், யாரோ ஒருவர் அதன் இயக்கத்தை மாற்றியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே விமானத்தின் இயக்கம் தானியங்கி முறையில் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 1.07 மணியளவில் பெறப்பட்ட  விமானத்தின் தகவல் தொடர்பு மற்றும் அறிக்கை முறைமையின் (Aircraft Communications Addressing and Reporting System – ACARS) கடைசி தகவலில் தான் மிக முக்கியமான தடயம் இருப்பதாகக் கருதுகின்றனர்.

இதற்கு முன்னர் மலேசிய அதிகாரிகள் கொடுத்த தகவலில், துணை விமானியிடமிருந்து அதிகாலை 1.17 மணிக்கு தகவல் வருவதற்கு முன்பாகவே ACARS துண்டிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினர். இதன் காரணமாக விமானிகள் இருவர் மீதும் சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில், மாஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் ACARS அதிகாலை 1.07 மணியில் இருந்து 1.37 மணிக்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால் அமெரிக்க அதிகாரிகள், விமானத்தின் பாதை அதற்கு முன்னதாகவே விமான மேலாண்மை முறைமையில் (Flight Management System) மாற்றியமைக்கப்பட்டு, விமானம் எந்த இடத்தில் திரும்ப வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.

விமானத்தின் பாதையில் செய்யப்பட்ட மாற்றம் கட்டுப்பாட்டு அறைக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் செய்யாத வகையில் மிக நுட்பமான வகையில் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த கூற்று, நேற்று வரை விமானி தற்கொலை என்ற கோணத்தில் பார்க்கப்பட்ட விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றது.