Home இந்தியா புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு!

புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு!

1476
0
SHARE
Ad

Infitt 440 x 215மார்ச் 24 – உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் (உத்தமம்), புதுவைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து அடுத்த பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை புதுச்சேரியில் சிறப்பாக நடத்தவிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்த பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21 ம் நாட்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தமம் நிறுவனத்தின் பணிகள்

உத்தமம் நிறுவனம் (International forum for Information Technology in Tamil- INFITT) பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள கணினி மற்றும் இணையத் தொழில்நுட்பத் துறைகளில் ஆர்வமுள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிறுவனத்தின் தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த வாசு ரெங்கநாதன் தற்போது செயல்பட்டு வருகின்றார். இலங்கையைச் சேர்ந்த தவரூபன் தங்கராஜா செயல் இயக்குநராகவும்,  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முகுந்த்ராஜ் சுப்ரமணியன் உதவித் தலைவராகவும், அமெரிக்காவின் சொர்ணம் தங்கராஜ் பொருளாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

Uttamam TI2013_ logoமலேசியப் பிரிவின் தலைவராக சி.எம்.இளந்தமிழ் செயலாற்றி வருகின்றார். மாநாட்டு வரிசையில் 12வது மாநாடு கடந்த ஆண்டு மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பதிவு பெற்றுள்ள இந்நிறுவனம் தொடங்கப்பட்ட கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளைப் பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளது என்பது தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும். தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி தொழில் நுட்ப ரீதியாக உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துள்ளது.

13வது புதுவை மாநாடு

உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் உத்தம் பெருமை கொள்கின்றது.

மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் இணையம் குறித்துத் தங்களின் அடுத்த கட்ட முயற்சிகளை எடுத்தியம்பும் நோக்கில்  ஒருங்கிணைய உள்ளனர்.

இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட புதுவை மாநில முதல்வர் ந. அரங்கசாமி அவர்களும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களும், பல்லவன் கல்வி நிறுவனங்களும், அரசு சார்ந்த மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும்  மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் மு. அனந்தகிருட்டிணன் ஆகியோரும் முன்வந்துள்ளனர்.

இவர்களுக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும், அவர்களின் ஆதரவுக்காக உத்தமம் நிறுவனம் பத்திரிக்கை அறிக்கை ஒன்றின் வழி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இந்த புதுவை மாநாடு ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி என்ற மூன்று நிலைகளில் நடைபெறும். உலகின் பல பாகங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய இறுதி நாட்கள் குறித்த செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் (www.infitt.org) விரைவில் வெளியிடப்படும்.

இந்த மாநாடு குறித்து மேலும் தகவல்கள் பெற விரும்புபவர்கள் உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.இந்த நிறுவனத்தின் இணையப் பக்கத்தின் வழியும் தொடர்பு கொள்ளலாம்.

புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உத்தமத்தின் முன்னாள் செயல் இயக்குநர் மணியம் (சிங்கப்பூர்), புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் மேற்குறிப்பிட்ட தகவல்களைத் தெரிவித்தனர்.