Home உலகம் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா.வில் இன்று வாக்கெடுப்பு!

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா.வில் இன்று வாக்கெடுப்பு!

513
0
SHARE
Ad

10-1394436235-srilankan-war-crime343-600-jpgமார்ச் 27 – கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் உச்சக் கட்டம் அடைந்தபோது, இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறி போர்க் குற்றங்களை நிகழ்த்தியது. போரின் இறுதிக்கட்டத்தில், அப்பாவி தமிழ் மக்கள் 40,000 திற்கும் மேற்பட்டோர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கை அரசு நடத்திய இந்த இனப்படுகொலையை சாடிய அமெரிக்கா உட்பட உலக நாடுகள், போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் தீர்மானம் நிறைவேற்றின.

இலங்கை பிரச்சினையில் ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடம், ஐ.நா. தூதர் நவி பிள்ளை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அப்போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசு பல்வேறு வழிகளில், வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தினாலும், அது பாதிக்கப்பட்ட மக்களிடம், நம்பகத்தன்மை ஏற்படும் அளவுக்கு அவை சுதந்திரமானவையாக இல்லை. எனவே நம்பகத்தன்மை மிக்க, சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நீதி விசாரணைக்காக அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானம் இன்று, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் பரிசீலனைக்கு வருகிறது. இது தொடர்பான விவாதத்துக்கு பின்னர், இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஐ.நா.விற்கான இலங்கை தூதர் ரவிநாத ஆர்ய சிங்கா, சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற நவி பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இந்த தீர்மானம் ஒரு தலைப்பட்சமானது. இலங்கையின் மீது கொண்டுள்ள தவறான அபிப்பிராயத்தின் வெளிப்பாடு” என கூறியுள்ளார்.

தீர்மானம் குறித்த, இந்தியாவின் நிலைப்பாடு, இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.