கோலாலம்பூர், மார்ச் 28 – சுபாங்கில் உள்ள மலேசியா ஏர்லைன்ஸ் விமான மின்னணுவியல் (Avionics) பயிற்சி மையத்தில் கடந்த புதன்கிழமை திடீரென தீ பிடித்துள்ளது.
எனினும், உடனடியாக தீ பரவாமல் அணைக்கப்பட்டதாகவும், பெரிய அளவிலான உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இது போதாத காலம் போல் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுபாங்கில் உள்ள விமான மின்னணுவியல் பயிற்சி அறையில் கடந்த புதன்கிழமை மாலை 4 மணிக்கு சிறிய அளவிலான தீ பற்றிக் கொண்டது. ஆனால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இவ்விபத்தில் எந்த இரு உயிர்சேதமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “பணியிடத்தில் பாதுகாப்பிற்கு மாஸ் நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து முன்னாள் வாங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் வீ சூ கியாங் தனது இணையத்தளத்தில் கூறுகையில், “மாஸ் ஏர்லைன்ஸ் நவின தொழில்நுட்ப பயிற்சிஅறை திடிரென தீபிடித்து எரிந்தற்கான காரணம் குறித்தும், தீ விபத்தில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டனவா? என்பது குறித்தும் மாஸ் ஏர்லைன்ஸ் தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் தலைவர் அஷாரி தாலான் விளக்கமளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த தீ சம்பவத்திற்கு நாச வேலை காரணமாக இருக்குமோ என்றும் வீ சூ கியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.
விமான மின்னணுவியல் (Avionics) என்பது விமானத்தில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு சாதனங்கள், கறுப்புப் பெட்டி ஆகியவை அடங்கிய ஒரு கருவியாகும்.
மாஸ் விமானம் MH370 கடலில் விழுந்ததாகக் கூறப்பட்டு அதை தேடும் பணி நடைபெற்று வரும் வேளையில், கடந்த வாரம் மேலும் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன. நேபாள் நாட்டின் காட்மண்டுவில் தரையிறங்கிய மாஸ் MH114 விமானம் வாத்துக் கூட்டத்தின் மீது மோதி சிறிய அளவிலான சேதமடைந்தது.
அதன் பின்னர், MH066 விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக ஹாங் காங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.