ஏப்ரல் 2 – நீரிழிவு என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்.
ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது.
குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல்,
இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.
இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் ,அதிகமாக தாகமெடுத்தல் , அளப்பரிய பசி ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த தினமும் 4 கப் டீ குடித்தால் போதும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஜெர்மனியில் உள்ள ஹெயின்ரிச் ஹெயின் பல்கலைக்கழகம் மற்றும் லிப்னிஸ் சென்டர் ஃபார் டயாபடிக் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து க்ரிஸ்டியன் ஹெர்பர் தலைமையில் நீரிழிவு நோய் குறித்து ஆய்வு நடத்தினர்.
ஆய்வு முடிவில் தினமும் 4 கப் டீ குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று கூறியுள்ளனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் ஆய்வு நடத்தி உள்ளனர்.
தினமும் அவர்களுக்கு டீ கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதில், 2 வகை நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
டீ குடிக்காத மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்களுக்கு 20 சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் டீ மட்டுமே அருந்த வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நீரிழிவு நோய்க்கு நார்ச் சத்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் இணைந்தே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.
இவற்றுடன் தினசரி 4 கப் டீ, டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உறுதியாகி உள்ளது. இதனால் பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.