கவுகாத்தி, ஏப்ரல் 8 – நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு வடகிழக்கு மாநிலங்களான அசாமின் 5 தொகுதிகளிலும், திரிபுராவின் ஒரு தொகுதியிலும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
அசாமில் 73 சதவீதமும் திரிபுராவில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. நேற்று பகல் 12 மணி நிலவரப்படி அசாம் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும் 35% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு அமைதியான முறையிலும் நடைபெற்றது.
தேஜ்பூர் மாவட்டத்தில் 27% வாக்குகளும், ஜோர்ஹடில் 45% வாக்குகளும், லக்மிபூரில் 32% வாக்குகளும், திப்ருகாரில் 38% வாக்குகளும் பதிவாகி இருந்தன.
முதல்வர் தருண் கோகோய், தனது மனைவி டாலி கோகோய் மற்றும் மகன் கவுரவ் கோகோய் ஆகியோருடன் ஜோர்ஹடில் வாக்களித்தார். கவுரவ் கோகோய் கோலியாபோர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திரிபுராவில் பெண்கள், வயதானவர்கள் என வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். முதல்வர் மானிக் சர்கார் அகர்தலா வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி திரிபுராவில் 60% வாக்கு பதிவாகி இருந்தது. ஓட்டுப்பதிவு இறுதியில் அசாமில் 73 சதவீதமும் திரிபுராவில் 83 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.