சோமாலியா, ஏப்ரல் 9 – சோமாலியாவில் கொடும் குற்றங்களையும், போதைப் பொருள் வரத்தையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வந்த ஐ. நா வின் அதிகாரிகள் இருவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் பாதுகாப்பு பணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவன் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.சோமாலியா என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கடும் பஞ்சமும் மற்றும் கடற் கொள்ளையர்களும் தான்.
இந்நிலையை மாற்றுவதற்காகவும், அந்நாட்டில் அமைதி நிலவுவதற்காகவும் ஐக்கிய நாடுகளின் சபை அதன் அதிகாரிகளை அனுப்பி நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக சைமன் டேவிஸ் மற்றும் கிளமெண்ட் கோரிஸென் என்ற இரு அதிகாரிகள் அங்கு பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் சோமாலியா நாட்டில் உள்ள புண்ட்லேண்ட் பகுதிக்கு சென்றனர்.
கல்கயோ விமான நிலையத்தில் அவர்கள் தரையிறங்கியபோது,
அங்கு பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் இருவரும் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு வீரர் ஒருவரும், அவரது சகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.