பினாங்கு, ஏப்ரல் 11 – தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கிய 56 கோடி ரிங்கிட் சம்பந்தமாக பிரதமர் அறிக்கை கேட்கும் அளவிற்கு மஇகா ஆளாகிவிட்டதா என்று பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலை ஏற்பட்ட பிறகு மஇகா – வினர் இனியும் தேமுவில் இருக்கத் தான் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். மஇகா மீது தேசிய முன்னணிக்கு நம்பிக்கை இல்லையா? என்று அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அமைச்சரவையில் உள்ள மஇகாவின் இரண்டு அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் மலேசிய இந்திய சமூகத்திற்கு செய்துள்ள சேவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஒதுக்கிய 56 கோடி ரிங்கிட் என்ன ஆனது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில் பிரதமர் மஇகாவின் அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் இந்த உத்தரவை பிரப்பித்திருப்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலைக்கு ஆளாகி விட்ட மஇகா எதிர்க்கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.