Home Featured நாடு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பினாங்குக்கு புதிய துணை முதல்வர்! இராமசாமி கேமரன் மலையில் போட்டியிடலாம்!

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பினாங்குக்கு புதிய துணை முதல்வர்! இராமசாமி கேமரன் மலையில் போட்டியிடலாம்!

891
0
SHARE
Ad

ramasamy-dap-deputy-chief-ministerஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது பினாங்கு துணை முதல்வராக பதவி வகித்து வரும் பேராசிரியர் பி.இராமசாமிக்குப் பதிலாக மற்றொரு ஜசெக இந்தியத் தலைவரை நியமிக்க ஜசெக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக பினாங்கு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதே வேளையில் கடந்த இரண்டு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்த இராமசாமியை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யும் வகையில் அவரை கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கேமரன் மலைத் தொகுதியில் நிறுத்தப்படும் மஇகா வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடப் பொருத்தமானவராக இராமசாமி கருதப்படுகின்றார்.

#TamilSchoolmychoice

கடந்த 2013 பொதுத் தேர்தலில்கூட இராமசாமி கேமரன் மலைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜசெக சார்பில் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது.

Jagdeep_Singh_Deo

நடப்பு ஆட்சிக் குழு உறுப்பினரும், மறைந்த கர்ப்பால் சிங்கின் மகனுமான ஜக்டிப் சிங் டியோ – அடுத்த துணை முதல்வராகலாம்….

ஆனால், ஜசெக ஒரு கொள்கையை கடந்த பொதுத் தேர்தலில் அமுல்படுத்தியது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் தவிர்த்து மற்ற அனைவரும் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் என ஒரே ஒரு அரசாங்கப் பதவியைத்தான் வகிக்க வேண்டும் என்ற கொள்கைதான் அது!

இதனைத் தொடர்ந்து, தனது பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, பினாங்கு பிறை சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலத்தின் துணை முதல்வராகவும் நீடிக்க இராமசாமி முடிவு செய்தார்.

ஆனால், 2008-ஆம் ஆண்டில் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அப்போதைய பினாங்கு முதல்வரும், கெராக்கான் தலைவருமான கோ சூ கூனைத் தோற்கடித்த அதே வேளையில், பிறை சட்டமன்றத்திற்கும் போட்டியிட்டு மஇகா வேட்பாளர் எல்.கிருஷ்ணனைத் தோற்கடித்தார் இராமசாமி.

ஆனால், 2013-இல் மேற்கூறிய ஜசெகவின் புதிய கட்சிக் கொள்கைக்கேற்ப சட்டமன்றத்திற்கு மட்டுமே போட்டியிட்டார் இராமசாமி.

ஏன் புதிய துணை முதல்வர்?

இராமசாமி இரண்டு தவணைகள் துணை முதல்வராக இருந்தாலும், அவரது சேவைகள் குறித்த சில திருப்திகளை சில தரப்புகள் வெளியிட்டாலும், அதைவிடக் கூடுதலாக அவர் குறித்த சர்ச்சைகள்தான் அதிகமாக இருக்கின்றன.

கடந்த கால சர்ச்சைகளைத் திரும்பிப் பார்ப்பதை விட, தற்போது பினாங்கு மாநிலத்தில் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் ‘இரண்டு இரதங்கள்’ சர்ச்சையால், மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்துக்களிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த சர்ச்சைகளுக்கு மூலகாரணமாக இராமசாமி பார்க்கப்படுகின்றார்.

இந்த சர்ச்சைகளின் காரணமாக, மீண்டும் இராமசாமி துணை முதல்வர் என அறிவிக்கப்பட்டால், அதனால் கணிசமான இந்தியர்களின் வாக்குகளை ஜசெக-பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இழக்க நேரிடும். குறிப்பாக செட்டியார்கள் எனப்படும் நகரத்தார் சமூகத்தின் வாக்குகள் ஜசெகவுக்குக் கிடைக்காது எனக் கருதப்படுகின்றது.

மேலும், இராமசாமி எப்போதும் தமிழ் ஈழம் குறித்த கருத்துகளையே அடிக்கடி வெளியிட்டு வருவதும், ஜசெகவுக்கு சில சமயங்களில் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் குறித்த அனுதாபங்கள், ஆதரவுகள் இருந்தாலும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர் பினாங்கு மாநிலத்தின் இந்தியர் பிரச்சனைகள் குறித்தும், மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்தும், அதிகமாக கவலைப் படுவதைவிட, தமிழ் ஈழம் குறித்துதான் அதிகமாகக் கவலைப்படுகின்றார் என்ற எண்ண ஓட்டமும் மலேசிய இந்தியர்களிடையே அதிகமாக எழுந்துள்ளதை, ஜசெக உணர்ந்துள்ளதாக, அதன் சில இந்தியத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றனர்.

புதிய துணை முதல்வர் யார்?

kasturi pattooகஸ்தூரி பட்டு – பினாங்கு மாநிலத்தின் அடுத்த துணை முதல்வரா?

இராமசாமிக்கு பதிலாக புதிய துணை முதல்வராக கர்ப்பால் சிங்கின் புதல்வர் ஜக்டிப் சிங் டியோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தனசேகரன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் கஸ்தூரி பட்டு சட்டமன்றத்திற்கு நிறுத்தப்பட்டு பினாங்கு துணை முதல்வராகலாம் என்றும் அதன் மூலம் மலேசியாவின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கலாம் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இராமசாமிக்கு எந்த நாடாளுமன்றத் தொகுதி?

இருப்பினும், சிறந்த கல்விமான், அறிவாற்றல் மிகுந்தவர், ஜசெகவில் இணைந்தது முதல், அதன் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்திருந்தவர், ஜசெகவின் இந்தியர் முகமாகப் பார்க்கப்படுபவர் என்பது போன்ற  காரணங்களால், அடுத்த பொதுத் தேர்தலில் இராமசாமியை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்ய ஜசெக தலைமை முடிவு செய்துள்ளது.

ஆனால், எந்தத் தொகுதியை அவருக்கு ஒதுக்குவது என்ற தேடலில் தற்போது ஜசெக தலைமை ஈடுபட்டுள்ளது.

manogaran-marimuthu-dap

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி ஜசெக வேட்பாளர் மனோகரனா, இராமசாமியா – ஜசெகவில் ஆரூடங்கள் தொடங்கி விட்டன….

2008-இல் அவர் போட்டியிட்ட பத்து கவான் தொகுதியில், 2013-இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற கஸ்தூரி பட்டு தற்போது ஜசெகவின் முன்னணி இந்தியத் தலைவர்களில் ஒருவராகவும், மகளிர் தலைவிகளில் ஒருவராகவும் உருவாகி வருகின்றார்.

எனவே, அவரையே மீண்டும் பத்து கவான் தொகுதியில் போட்டியிட வைக்க ஜசெக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்து கவான் தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக கெராக்கான் உதவித் தலைவர் கோகிலன் பிள்ளை நியமிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அங்கு அவர் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

எனவே, கோகிலன் பிள்ளையை எதிர்த்துப் போட்டியிட, ஏற்கனவே ஒரு தவணை பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினராக அனுபவம் பெற்றுவிட்ட கஸ்தூரி பட்டுதான் பொருத்தமானவர் என்பதால், அவரையே மீண்டும் அங்கேயே நிறுத்த ஜசெக தலைமை எண்ணம் கொண்டுள்ளது.

இரட்டை இரதம் பிரச்சனையால், மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இராமசாமியை பினாங்கு மாநிலத்திலேயே நிறுத்தாமல் – அதனால் ஏற்படக் கூடிய சர்ச்சைகளுக்கு மீண்டும் இடம் கொடுக்காமல் – அவரை மற்றொரு மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக நிறுத்தவும் ஜசெக தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அவ்வாறு இராமசாமி போட்டியிட அடையாளம் காணப்பட்டுள்ள இடம் கேமரன் மலைத் தொகுதி எனக் கருதப்படுகின்றது. இராமசாமியை இங்கு ஜசெக வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என ஜசெக தலைமை கருதுவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 2013-இல் கேமரன் மலைத் தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்டு அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவிடம் சுமார் 400 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட வழக்கறிஞர் எம்.மனோகரன்தான் மீண்டும் கேமரன் மலையில் போட்டியிடுவார் என பரவலாக இதுநாள் வரையில், எதிர்பார்க்கப்பட்டது.cameron-highlands-2013-ge-results

2013 பொதுத் தேர்தலில் கேமரன் மலைத் தொகுதி வாக்கு விவரங்கள்

மனோகரனும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், கேமரன் மலை ஜசெக ஆதரவாளர்களைச் சந்தித்தும் தனது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் என கேமரன் மலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இராமசாமி இங்கு போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளதால், கேமரன் மலையில் ஜசெக சார்பில், மஇகா வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடப் போவது இராமசாமியா அல்லது மனோகரனா என்ற கேள்விகளும் ஜசெக வட்டாரங்களில் எழுந்துள்ளன.

இராமசாமியை மீண்டும் பினாங்கு மாநிலத்திலேயே போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டால், அவருக்கு மீண்டும் பத்து கவான் தொகுதி ஒதுக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கஸ்தூரி பட்டுவை, பிறை அல்லது மற்றொரு சட்டமன்றத் தொகுதிக்கு நிறுத்தி, வெற்றி பெற்ற பின்னர் மாநில துணை முதல்வராக நியமிக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன என்றும் ஜசெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-இரா.முத்தரசன்