கோலாலம்பூர், ஏப்ரல் 28 – அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை முன்னிட்டு மலேசிய அரசாங்கத்தின் சார்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகள் குறித்த விவரங்களை மலேசிய அமைச்சர்கள் தங்களின் டிவிட்டர் அகப்பக்கம் வாயிலாக பரிமாறிக் கொண்டுள்ளனர்.
நேற்று பிரதமர் நஜிப் தனது அதிகாரபூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவில் ஒபாமாவுக்கு வழங்கிய இரவு விருந்தில் ஒபாமா என்ன உணவுகளை சாப்பிட்டார் என்பது குறித்து தற்காப்பு அமைச்சரும், இடைக்காலப் போக்குவரத்து அமைச்சருமான ஹிஷாமுடின் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கின்றார்.
அந்த இரவு விருந்தில் நாசிக் கோரிங் என்ற சாதக் கலவை பிரட்டல், பெரிய வகை இறால்கள், பத்தின் எனப்படும் மலேசிய ஆற்று மீன்கள், சம்பல் பிளச்சான் எனப்படும் மிளகாய் துவையல் ஆகியவை ஒபாமாவுக்கு பரிமாறப்பட்டதாக ஹிஷாமுடின் தெரிவித்தார்.
ஆனால், அந்த சம்பல் பிளச்சானை சாப்பிடுவதற்கு ஒபாமா அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றும் ஹிஷாமுடின் ட்விட்டரில் தெரிவித்தார்.
இதற்கிடையில், மதிய உணவு வேளையின் போது தனது மேசையின் முன்னால் தட்டில் வைக்கப்பட்டிருந்த டுரியான் பழத்தை ஒபாமா வித்தியாசமாக பார்ப்பது போன்ற படத்தை ஒபாமாவுடன் உடன் செல்லும் அமைச்சராகப் பணியாற்றிய கைரி ஜமாலுடின் தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார்.
அந்தப் படத்தோடு “உலகின் மிகவும் பலம் வாய்ந்த மனிதன் பழங்களில் ராஜாவான டுரியானை முறைத்துப் பார்க்கிறார்” என்று நகைச்சுவையாக கைரி குறிப்பிட்டிருந்தார்.
அந்த ட்விட்டருக்கு பதிலளித்த ஹிஷாமுடின் “ஒபாமாவுக்கு டுரியானைப் பற்றி நன்கு தெரியும். அதனால் அவர் அதனை சாப்பிடமாட்டார்” என்று தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
அதே போன்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட், ஒபாமாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிரதமரும் ஒபாமாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் நேற்று முன்தினம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.