Home நாடு எம்எச்370 – தீராத சர்ச்சையும் சந்தேகமுமாகத் தொடரும் டன் கணக்கான மங்குஸ்தீன், கல்லியம்...

எம்எச்370 – தீராத சர்ச்சையும் சந்தேகமுமாகத் தொடரும் டன் கணக்கான மங்குஸ்தீன், கல்லியம் மின்கல சரக்குப் பட்டியல்

549
0
SHARE
Ad

MH370 (2)கோலாலம்பூர், மே 4– காணாமல் போன எம்.எச். 370 விமானம் குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து, அந்த அறிக்கையிலிருந்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

எம்எச் 370இல், 4,566 டன் மங்குஸ்தீன் பழங்கள் ஏற்றப்பட்டன என அறிக்கையோடு இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பட்டியல் தெரிவிக்கின்றது.

mangosteenஅந்த மங்குஸ்தீன், சரக்கு விவரப் பட்டியலின்படி அதன் மதிப்பு வெ.51,367.50 என்றும் அதை மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் பெய்ஜிங்கிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் பதிவு செய்திருந்தார் என்றும் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

ஆனால், மங்குஸ்தீன் பழங்களோ நீண்ட நாட்களாக வைக்க முடியாத தன்மை கொண்டவை. பருவ காலப் பழமான இந்தப் பழம் மார்ச் மாதத்தில் மலேசியாவில் கிடைக்காது – அதுவும் டன் கணக்கில் கிடைக்காது என்பதுதான் அனைவருக்கும் எழுந்துள்ள முதல் சந்தேகம்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லியல் மின்கலம் குறித்த சர்ச்சைகள்

large_12v-100ah-lithium-ion-batteryஅத்துடன் கல்லியம் மின்மயத் துகள் (Lithium ion) மின்கலங்கள் (பேட்டரிகள்) 200 ஏற்றப்பட்டிருந்தன என்றும் சரக்குப் பட்டியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் எடை 2,453 டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 200 மின்கலங்கள் அவ்வளவு எடையைக் கொண்டிருக்காது என்றும் தகவல் ஊடகங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளன. இதனால் இவற்றோடு வேறு பொருட்கள் ஏதும் சேர்க்கப்பட்டிருந்ததா, என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அந்த கல்லியம் மின்மயத்துகள் மின்கலங்களின் மதிப்பு வெ.32,082,48 என்றும் அவை சீக்கிரம் தீப்பிடிக்கக் கூடிய அபாயமுள்ள பொருள் என்பதால் அவை கவனமாக கையாளப்பட வேண்டும் எனும் எச்சரிக்கை வாசகங்களோடு அவை ஏற்றப்பட்டன என்றும் சரக்குப் பட்டியல் விவரம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், இந்த சரக்குகளை ஏற்றியிருந்த எம்.எச். 370 விமானம் கடந்த மார்ச் 8இல் அதிகாலை 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்ட போது காணாமல் போனது.

இதனால், சரக்குப் பட்டியலில் குறிப்பிடப்பட்டபடி உண்மையிலேயே மங்குஸ்தீன் பழங்களும் கல்லியம் மின்கலங்களும் ஏற்றப்பட்டனவா, அல்லது வேறு பொருட்கள் மறைமுகமாக ஏற்றப்பட்டனவா –

அப்படி ஏற்றப்பட்டிருந்தால் அந்த மர்மப் பொருட்கள் என்ன –

அந்த பொருட்களுக்கும், விமானம் காணாமல் போனதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா –

என்பது போன்ற சந்தேகங்களும், சர்ச்சைகளும் இன்னும் தொடர்கின்றன.