சென்னை, மே 8 – வெளிநாட்டு கார் இறக்குமதியில் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை சிபிஐ கைது செய்துள்ளது.
இவர் மறைந்த ராமசாமி உடையாரின் மகன் ஆவார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப், வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்து அதை இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விற்பனை செய்துள்ளார்.
இதில் பல நூறு கோடி அளவுக்கு வரி ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், இவர் தனது “டி.சி.பி. லிமிட்டெட்” என்ற நிறுவனம் மூலம் ரூ. 100 கோடி (மலேசியா 5,50,000,00 வெள்ளி) மதிப்புள்ள 33 வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்துள்ளார்.
இதற்கான விதிமுறைகளைப் பின்பற்றாமலும், வரியைச் செலுத்தாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு ரூ.48 கோடி வரை வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை வருமான வரித்துறையின் வருவாய் புலனாய்வு பிரிவு விசாரித்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த அலெக்ஸ் ஜோசப்பை கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சிபிஐ மூலம் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அலெக்ஸிடம் கார் வாங்கியவர்களான திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஹம்மர் காரை வாங்கியுள்ளார். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் ஆகியோர் உள்பட 18 பேரின் வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலத்துக்கு சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வி.ஆர். வெங்கடாசலம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையின் முடிவில், வெங்கடாசலத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சிபிஐ நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட இவர் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அலெக்ஸ் ஜோசப் தவிர மேலும் 21 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது சிபிஐ.