கோவை, மே 8 – வாக்கு எண்ணிக்கை நாளிலும் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
இன்று தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பத்திரிகைக்கு செய்தி வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவாது,”தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 24-ஆம் தேதி நடந்தது.
அதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 16-ஆம் தேதி நடக்கிறது. இம்முறை முன்பிருந்ததை விட ஒவ்வொரு சுற்றிலும் எண்ணிக்கை முடிந்து அதை உறுதி செய்த பின்னர் அடுத்த சுற்று துவங்கும்.
இதனால் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று வெளியாவதில் சில நிமிடங்கள் கூடுதலாகலாம். அடுத்தடுத்த சுற்றுகள் உடனடியாக வெளியாகும். வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை முன்னிட்டு 144 தடை உத்தரவு தேவைப்படும் பட்சத்தில் அமல்படுத்தப்படும்.
அதை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்கள் சூழ்நிலையின் தன்மைக்கேற்ப முடிவெடுத்து பிறப்பிப்பார்கள். வாக்கு எண்ணும் மையங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30-ஆம் தேதிக்குள் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.