மே 19 – தொழில்நுட்பத் துறையின் முன்னோடிகளான கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையே நீண்ட நாட்களாய் நிலவிவந்த திறன்பேசிகளுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கில், அந்நிறுவனங்கள் சமரசம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ளன.
இதன்படி ஒன்றை ஒன்று எதிர்த்து தொடர்ந்த அத்தனை வழக்குகளையும் விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் மோட்டரோலா நிறுவனம், ஆப்பிளுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு காப்புரிமை தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இதை தொடர்ந்து கூகுள் மற்றும் ஆப்பிளுக்கிடையே பல வழக்குகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்களில் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றது.
தற்போது இந்த வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன. எனினும், இரு நிறுவனங்களுக்கிடையிலான இந்த திடீர் சமரசத்திற்கான காரணங்கள் குறித்தோ அல்லது தொழில்நுட்ப உரிமத்தை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் குறித்தோ விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சாம்சங் – ஆப்பிள் நிறுவன காப்புரிமை விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு, 119.6 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்குமாறு சாம்சங் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.