கோலாலம்பூர் – உலக அளவில் பங்கு வர்த்தகத்தில் நேற்றைய தினம் கருப்பு தினமாக நினைவில் கொள்ளப்படும். சீனப் பங்குச் சந்தையின் பெரும் வீழ்ச்சி, உலகம் எங்கும் எதிரொலித்துள்ளது. ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என்ற பாரபட்சம் இன்றி, அனைத்து முக்கிய நாடுகளும் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
இந்நிலையில் இந்த வீழ்ச்சி, தொழில்நுட்ப நிறுவனங்களையும் விட்டு வைக்க வில்லை. அமெரிக்க நிறுவனங்களே கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சீனாவின் நம்பிக்கைக்குரிய நிறுவனமான அலிபாபாவோ தொடக்க கால விலையைக் (IPO) கூட ஈடு செய்ய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள் படி, பேஸ்புக் நிறுவனம் 12.1 சதவீதமும், ஆப்பிள் 10 சதவீதமும், கூகுள் 6.5 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 5.8 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இனி சீனாவில் ஆப்பிளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என டிம் குக்கிடம் கேட்கப்பட்டது. இது குறித்து டிம் குக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவில் எங்களது செயல்பாடுகள் பற்றி தொடர்ச்சியாக அறிந்து வருகிறேன். இன்றைய நிலையையும் (பங்குச் சந்தை வீழ்ச்சி) அறிவேன். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கமுடியாவிட்டாலும், இதுவரை சீனாவில் எங்களது செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனா, கடந்த சில வருடங்களில் எங்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கி உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.