நியூயார்க், ஜூன் 14 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் இடையே நிலவி வரும் கடும் போட்டியினால் இரு நிறுவனங்களும் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றன.
அந்த வகையில், ஆப்பிளின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ‘ஹெல்த் கிட்’ (Health Kit) செயலிக்கு போட்டியாக, கூகுள் நிறுவனமும் ‘கூகுள் ஃபிட்’ (Google Fit) என்ற புதிய செயலியினை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
கூகுளின் கூகுள் ஃபிட் தயாரிப்பானது, இம்மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ள கூகுள் ஐ/ஒ மாநாட்டில் அறிமுகப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கூகுள் ஃபிட் பயன்பாட்டின் மூலம் பயனர்கள் தங்கள் உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி, மருத்துவ அறிக்கைகள் மற்றும் குறிப்புகளை பராமரிக்க முடியும். ஆனால் இந்த செயலியானது அண்டிரோய்ட் இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கபட்டு வெளிவருமா? அல்லது தனிச் செயலியாக வெளிவருமா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.