சென்னை, மே 20 – நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. அக்கட்சியால் ஒரு தொகுதியைக் கூட பெறமுடியவில்லை. இத்தோல்விக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதை தலைமை ஏற்காததால் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இதுகுறித்து பேசுகையில், திமுக தலைமைக்கு நெருக்கமாக அரசியல் அரிச்சுவடி தெரியாத இரு பூசாரிகள் உள்ளனர். அவர்கள் திமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியனுமே தான் குறிப்பிட்ட இரு பூசாரிகள் என்று சுட்டிக்காட்டினார். இருவரும் திமுகவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்குகிறார்கள் என்றார் அழகிரி.
கட்சியிலிருந்து கலைஞரை அப்புறப்படுத்திவிட்டு அந்தப் பதவியில் தன்னை அமர்த்திக் கொள்ள ஸ்டாலின் நடத்திய நாடகமே பதவி விலகல் என்று அறிவித்தது. நான் உட்பட எனது ஆதரவாளர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்க வைத்துவிட்டார். நாடாளுமன்றத்திற்கு தானே முழுப் பொறுப்பேற்று ஸ்டாலின் கட்சியை வழிநடத்தினார்.
திமுகவில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் தானே முன்னின்று தேர்வு செய்தார். இதில் கட்சிக்கு சம்பந்தமில்லாத பலரும் பணத்தை கொடுத்தோ, காட்டியோ வேட்பாளர்கள் ஆக்கப்பட்டனர். இதில் அனைத்து இடங்களிலும் திமுக தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கி.வீரமணியும், சுப.வீரபாண்டியனும் திமுகவுக்கு எந்த நல்லதையும் நினைப்பதும் இல்லை, செய்ததும் இல்லை என்றும், இருவரும் தேர்தலை சந்திக்காதவர்கள். அவர்களுக்கு எப்படி கட்சி நிலவரம் தெரிய வரும். இவர்கள் இருவரையும் அழைத்து வந்து ஆலோசனை கேட்டால் அவர்கள் என்ன சொல்வர்? அவர்கள் தப்பும் தவறுமாக சொல்வதைக் கேட்டு திமுகவை அழிவுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்று அவர் சொன்னார்.
இதனிடையே, ஸ்டாலினுக்கும் ஒருவர் இருக்கிறார். நேரம் வரும்போது அவர் பெயரை சொல்கிறேன். அவருக்கு நான் வைத்திருக்கும் பெயர் ‘சிலந்தி’. அவர் எப்படியும் ஸ்டாலினை பாதாளத்துக்குள் தள்ளிவிடுவார் என்பது நிச்சயம் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.