கோலாலம்பூர், மே 21 – சாதாரண கைத் தொலைபேசிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்கள் தற்போது திறன் பேசிகளாக உருமாறி உலகமெங்கும் தொழில்நுட்ப புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதன் அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்பட்ட டேப்லெட் என்ற (Tablod) தட்டைக் கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் இதனை முதன்முதலில் 2010ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
அப்போதிலிருந்து இதுவரை ஏறத்தாழ 210 மில்லியன் ஐபேட் கணினிகளை ஆப்பிள் விற்று சாதனை புரிந்துள்ளது. இந்த விற்பனை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனையை விட அதிக வளர்ச்சியை கொண்டதாக இருந்தது.
இதன் காரணமாக மடிக் கணினிகள் (லேப்டாப்) மற்றும் மேஜைக் கணினிகளின் விற்பனை பெரும் அளவில் குறைந்தது. ஆனால், இப்பொழுது இந்தாண்டு தொடக்கத்திலிருந்து தட்டைக் கணினிகளின் விற்பனை விகிதாசாரம் சரிந்துள்ளதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
அதேபோன்று மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் தட்டைக் கணினிகளின் விற்பனையும் ஆர்வமும் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளன.
அமெரிக்க சந்தையில் 40 சதவிகிதம்
உலகளவில் தட்டைக் கணினிகளின் விற்பனை முதல் காலாண்டில் 19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆரம்பக் காலங்களில் எதிர்பார்க்கப்பட்டது போல் இதன் விற்பனை விகிதாசாரம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. மாறாக விற்பனைகள் பின்னடைவுகளை சந்திக்கின்றன.
அமெரிக்க சந்தையில் 40 சதவீதத்தினர் மட்டுமே தட்டைக் கணினிகளை கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் தற்போது திறன் பேசிகளின் வடிவமைப்பும் செயல்திறனும் பன்மடங்கு பெருகியுள்ளதுதான்.
திறன்பேசிகளின் முகப்புத் திரைகள் பெரியதாகவும் அகலமானதாகவும் வடிவமைக்கப்படுவதால் பல பயனீட்டாளர்கள் தட்டைக் கணினிகளை வாங்குவதைவிட திறன்பேசிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தட்டைக் கணினிகளை ஆற்றக் கூடிய தொழில்நுட்பப் பணிகளை இந்தத் திறன் பேசிகள் மூலமே நிறைவேற்றமுடிகின்றது.
ஆனால், அதே வேளையில் விலைக் குறைவான தட்டைக் கணினிகளின் விற்பனைகள் உயர்ந்துள்ளதாக வேறு சில வணிக ஆய்வுகள் காட்டுகின்றன.
பல பல்பொருள் அங்காடிகள் தங்களின் சொந்த வணிக முத்திரையைப் போட்டு 200 அமெரிக்க டாலருக்கும் குறைவான விலையில் தங்களின் பேரங்காடிகளில் தட்டைக் கணினிகளை விற்று வருகின்றன.
ஆன்ட்ராய்ட் தொழில்நுட்ப தளத்தில் இயங்கும் தட்டைக் கணினிகளின் விற்பனை 48 சதவீதம் வரை முதல் காலாண்டில் உயர்ந்துள்ளதாக மற்றொரு வணிக ஆய்வு தெரிவிக்கின்றது.
ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், இசைப் பாடல்கள் போன்றவற்றை பார்க்கக்கூடிய விலைமலிவான தட்டைக் கணினிகள் பிரபல்யமாகி வருகின்றன.
தற்போதுள்ள ஐபேட் சாதனத்தால் மடிக் கணினியில் செய்யக் கூடிய பல செயல்களை செய்யமுடியவில்லை என்பதால் மடிக் கணினியைப் போன்றே திறன் கொண்ட தட்டைக் கணினி ஒன்றை உருவாக்கி அறிமுகப்படுத்துவதற்கு ஆப்பிள் நிறுவனம் முயன்று வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
7.61 பில்லியன் அமெரிக்க டாலர்
கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனங்களின் விற்பனை மூலம் மட்டும் 7.61 பில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், நாளடைவில் தட்டைக் கணினிகளின் விற்பனை மேஜை அல்லது மடிக்கணினிகளின் விற்பனையை விட கூடுதலாக இருக்கும் என்றும் இதனால் ஆப்பிள் நிறுவனம் பயனடையும் என்று கூறியிருக்கின்றார்.
எனவே இனி வரும் ஆண்டுகளில் அதிக அளவில் உலகை ஆக்கிரமிக்கப் போவது தட்டைக்கணிகளா அல்லது திறன்பேசிகளா என்ற நிலைமை தொடரும்.