மே 29 – பிரபல ஆப்பிள் நிறுவனம், ஹெட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ‘பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ்’ (Beats Electronics) நிறுவனத்தை, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியது.
ஆப்பிள் நிறுவனம், தனது ஐட்யூன் மற்றும் ஐரேடியோ சேவையை மேம்படுத்த, ஹெட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை வாங்க இருப்பதாக கடந்த மூன்று வார காலமாக ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஆப்பிள் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பீட்ஸ் நிறுவனத்துடனான இந்த வர்த்தகம் பற்றி ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், “பீட்ஸ் நிறுவனம், கடந்த வருடம் மட்டும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இலாபம் அடைந்துள்ளது. தற்போது, அதனை ஆப்பிள் வாங்கியுள்ளதால், இந்த வளர்ச்சி ஆப்பிளின் வளர்ச்சியிலும் பிரதிபலிக்கும்” என்று கூறியுள்ளார்.
ஆப்பிளின் 38 வருட வரலாற்றில், பீட்ஸ் நிறுவனமே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நிறுவனம் ஆகும். சமீப காலமாக ஐட்யூன் ஸ்டார்-ல் ஏற்பட்ட தொய்வு காரணமாகவே பீட்ஸ் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஹெட்போன் தயாரிப்பு மட்டும் அல்லாது இசை ஒலிபரப்பு மற்றும் சேர்ப்பிலும் பெயர் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.