வாஷிங்டன், மே 29 – தான் ஒரு பயிற்சி பெற்ற அமெரிக்க உளவாளி என அந்நாட்டு உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.
சிஐஏ-வின் முன்னாள் ஊழியரான ஸ்னோடென் (30) அமெரிக்க அரசு, இராணுவம் உள்ளிட்ட துறைகளின் ரகசியத் தகவல்கள் அடங்கிய குறுந்தகடுகளுடன் அந்நாட்டை விட்டு சில மாதங்களுக்கு முன் வெளியேறினார்.
அவற்றை விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் தற்போது ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
“ஸ்னோடென் ஒரு முழு அளவிலான உளவாளி அல்ல. அவர் இணையதளங்களில் ஊடுருவும் திறன் பெற்ற ஒரு கடைநிலை ஊழியர்தான்’ என்று அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதை மறுத்து, முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த என்.பி.சி. தொலைக்காட்சிக்கு ரஷ்யாவில் இருந்தபடி ஸ்னோடென் அளித்த பேட்டி ஒன்றில், “சிஐஏ அமைப்பால் நான் ஒரு உளவாளியாகவே பயிற்சியளிக்கப்பட்டேன். பல்வேறு நாடுகளுக்கும் சென்று வேறு ஏதோ வேலை செய்யும் நபர் போல் நடித்து வேவு பார்த்துள்ளேன். நான் கடைநிலை ஊழியர் அல்ல. தொழில்நுட்ப நிபுணரான நான் அமெரிக்க அரசின் உயர்நிலை பதவியில் பணிபுரிந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.