வாஷிங்டன், மே 29 – கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக லிபியாவில் சர்வாதிகாரியாக விளங்கிய முயம்மார் கடாபியை அந்நாட்டு ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் நேட்டோ படையினரின் உதவியுடன் கடந்த 2011-ம் ஆண்டு பதவியிலிருந்து இறக்கி, அவரை படுகொலையும் செய்தனர்.
ஆனால் அதன் பின்னர் அங்கு ஆட்சில் இருந்த அரசுகளால் உள்ளூர் கிளர்ச்சியாளர்களின் அதிகாரத்தை அடக்க முடியவில்லை.
தங்களுக்கு சுயாட்சி கேட்கும் அவர்கள், அங்குள்ள எண்ணெய் வயல்களையும், துறைமுகங்களையும் கைப்பற்றி நாட்டின் பொருளாதாரத்தையே நிலைகுலைய வைத்து வருகின்றனர்.
அங்கு தொடர்ந்து வரும் வன்முறைக் கலவரங்களால் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதை ஒட்டி அமெரிக்க வெளியுறவுத்துறை, லிபியாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு நேற்று முன்தினம் எச்சரித்துள்ளது.
அதேபோல் அங்கு பயணம் மேற்கொள்ள இருப்பவர்களையும் தங்கள் பயணங்களை ஒத்திப் போடுமாறு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அங்குள்ளோரின் பாதுகாப்பு என்பது உறுதியற்ற நிலையில் இருக்கின்றது என்றும், வன்முறைகளால் மக்களின் வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றும் அரசு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே, அவசிய காரணங்களைத் தவிர திரிபோலிக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.