கோலாலம்பூர், ஜூன் 4 – அம்னோவைப் பற்றியும், பிரதமர் நஜிப் துன் ரசாக் பற்றியும் அவதூறு கூறும் வாசகர்கள் கருத்துகளை கட்டுரையாக வெளியிட்டதற்காக மலேசியாகினி செய்தி இணையத்தளத்திற்கு எதிராக நஜிப் வழக்கு தொடுத்தார்.
அதற்கான நீதிமன்ற ஆணை நேற்று மலேசியாகினி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
மலேசியாகினியின் வெளியீட்டு நிறுவனம் எம்கினி டாட்காம் செண்டிரியான் பெர்ஹாட், ஆசியர்குழு தலைவர் ஸ்டீவன் கான் மற்றும் தலைமை ஆசிரியர் பாத்தி ஆரிஸ் ஓமார் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே 14 -ம் தேதி, மலேசியாகினியில் “உங்கள் கருத்துக்கள்” என்ற தலைப்பில் பிரதமரைப் பற்றிய அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாக அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் ஜூன் 18 -ம் தேதி, நீதிபதி எஸ்எம் கோமதி சுப்பையா முன்னிலையில் முதற்கட்ட விசாரணைக்கு வருகின்றது.
இந்நிலையில், மலேசியாகினியின் ஆசிரியர்குழுத் தலைவர் ஸ்டீவன் கான் இந்த வழக்கு தாங்கள் எதிர்பார்த்தது தான் என்றும், அதை எதிர்கொள்ளத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.
வாசகர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க நஜிப்பும், அம்னோவும் தவறிவிட்டதாகவும், நஜிப்புக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டதாகவும் ஸ்டீவன் கான் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை வாசகர்களின் கருத்துக்களுக்கு நஜிப் பதிலளித்து இருந்தால் நிச்சயம் மலேசியாகினி அதை வெளியிட்டிருக்கும் ஆனால் அதைவிடுத்து நஜிப் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்றும் ஸ்டீவன் கூறியுள்ளார்.
மலேசியாகினி மீது தொடுக்கப்பட்டிருக்கும் இதர வழக்குகள்
நஜிப் தொடுத்துள்ள வழக்கைத் தவிர மலேசியாகினி மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவற்றில், 13 வது பொதுத்தேர்தலின் போது லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அன்வாரின் கருத்துக்களை வெளியிட்டதற்காக, அவர் மீதும் மலேசியாகினி மீதும் முன்னாள் கூட்டரசு அமைச்சர் ராஜா நோங் சிக் ஸைனல் அபிடின் தொடுத்துள்ள வழக்கு.
என்எப்சி (The National Feedlot Corporation) ஊழல் குறித்து கினிடிவியில் வெளியிடப்பட்ட ரபிஸி ரம்லியின் கருத்துக்காக மலேசியாகினி மீது என்எப்சி தொடுத்துள்ள வழக்கு.
தங்க சுரங்க நிறுவனம் பயன்படுத்தும் தங்கம் பிரித்தெடுக்கும் முறையால் புக்கிட் கோமான் குடியிருப்பாளர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுகின்றது என்பது குறித்த கட்டுரை வெளியிட்டதற்காக ராவுப் ஆஸ்ட்ரேலியன் கோல்ட் மைனிங் நிறுவனம் தொடுத்துள்ள வழக்கு என மலேசியாகினி மீது நான்கு வழக்குகள் உள்ளன.
மலேசியாகினி இதற்கு முன்னர் உள்துறை அமைச்சருக்கு எதிராக தொடுத்த வழக்கில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.