நியூயார்க், ஜூன் 11 – முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ஆம் ஆண்டில் தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற மனித உரிமை அமைப்பினர் 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க்கின் புரூக்ளின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை எல்லை வரம்புக்கு உட்பட்டதாக இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சோனியா தரப்பில் கூறப்பட்டது.
இது போன்ற வேறு வழக்குகளை தொடரவும் சீக்கிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சோனியாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
‘வெளிநாட்டில் வாழ்ந்தபோது சித்ரவதை என்ற சட்டப்பிரிவின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்சிக்காரர்களாக சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு இந்த வழக்கில் மனுத் தாக்கல் செய்துள்ளது செல்லத்தக்கதல்ல’ என்று தெரிவித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இது போன்ற வேறு வழக்குகளைத் தொடரக் கூடாது என்று சீக்கிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சோனியாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி அவ்வகையில் எவ்வித தடையும் விதிக்க மறுத்து விட்டார். இதனிடையே அமெரிக்காவில் சோனியாவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடியானதால் அவருக்கு ஒரு வழியாக நிம்மதி கிடைத்துள்ளது.