ஜூன் 13 – டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான அலி ரௌவ்கானி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரௌவ்கானி, “டிவிட்டருடனான இந்த பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிவிட்டர் நிறுவனமும் இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்படுவதாவது, “அலி ரௌவ்கானி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் இனி அந்த பொறுப்பிற்கு வரும் தலைமை இயக்க அதிகாரிக்கு முக்கிய ஆலோசகர் ஆக இருப்பார்.தற்போது வரை புதிய தலைமை இயக்க அதிகாரியை தேர்வு செய்யும் எண்ணமில்லை. அவரின் பொறுப்புகள் அனைத்தும் குழுவின் மற்ற உறுப்பினர் பகிர்ந்து கொள்வர்” என்று அறிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகள் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்த ரௌவ்கானி, கடந்த 2012-ம் ஆண்டு தலைமை இயக்க அதிகாரியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலி ரௌவ்கானியின் இந்த திடீர் இராஜினாமா பற்றி தொழில்நுட்ப பத்திரிக்கைகள் கூறுகையில், “டிவிட்டர் நிறுவனம், தனது ஆளுமையை மற்ற போட்டி நிறுவனங்களுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன் காரணமாக தலைமை நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வர டிவிட்டர் முயற்சித்து வருகின்றது” என்று கூறியுள்ளன.