ஜூன் 20 – ஆப்பிள் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தனது குறைந்த விலை ‘ஐமேக்’ (iMac) கணினியினை கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்தியது.
முந்தைய பதிப்பினை விட குறைந்த மற்றும் சிறிதளவு மாறுபட்ட கட்டமைப்புகளுடன் வெளிவந்து இருக்கும் இந்த கணினியின் விலை 1099 அமெரிக்க டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கணினியில் அதிவேக திறனுக்காக 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ‘டூயல்-கோர்’ செயலி, 500ஜிபி ஹார்ட் டிரைவ் மற்றும் 8ஜிபி முதன்மை நினைவகம் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய பதிப்பில் இண்டெல் செயலியானது 2.7 ஜிகாஹெர்ட்ஸ் என்ற அளவீட்டில் இணைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய கணினியில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக குறைக்கப்பட்டு இருக்கின்றது. அதனால் இதன் விலையில் முந்தைய மதிப்பினை விட 200 அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது.
மேலும், இவற்றில் கிராபிக்ஸ் கார்டுகளும் ‘இண்டெல் ஐரிஷ் ப்ரோ’ ( Intel Iris Pro)- லிருந்து இண்டெல் ஹஎச்டி கிராபிக்ஸ் 5000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த 21.5 அங்குல ஐமேக் கணினியின் அறிமுகவிழவின் போது கூறியதாவது:-
“தற்போது வெளிவந்துள்ள 21.5 ஐமேக் கணினிகள், தொடக்க நிலை ஐமேக் டெஸ்க்டாப்களில் சிறந்த ஒன்றாகும். இதற்கு முந்தைய மேம்பட்ட பதிப்பினை விட சிறிதளவே மாறுபாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஐமேக் பயனர்களுக்கு குறைந்த விலையில் ஒரு சிறந்த கணினியாக இந்த புதிய 21.5 மேக் இருக்கும் என்பது நிச்சயம். ஐலைப் வசதியுடன் வெளிவரும் இந்த கணினியில் ஐபோட்டோ, ஐமூவி மற்றும் பல புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு ஐமேக் கணினிகள் 1099 அமெரிக்க டாலர்களில் மிகக் குறைந்த கட்டமைப்புகளில் வெளிவந்தது. ஆனால், தற்போது அதே விலையில் சிறந்த கட்டமைப்புகளுடன் வெளிவந்து இருப்பது ஐமேக் பயனர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படம்: EPA