Home நாடு பழைய புடு சிறைச் சாலை பிரமாண்ட வணிக வளாகமாக உருமாற்றம்

பழைய புடு சிறைச் சாலை பிரமாண்ட வணிக வளாகமாக உருமாற்றம்

666
0
SHARE
Ad

PUDUகோலாலம்பூர், ஜூன் 25- கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக தலைநகரின் முக்கிய சின்னமாக விளங்கி வந்த பழைய புடு சிறைச் சாலை அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு சில வருடங்களாகி விட்டது. பழைய சிறைச்சாலைக் கட்டிடம் முற்றாக இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டும் விட்டது.

இந்த இடத்தில் ஒரு புதிய வணிக வளாகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அவையனைத்தும் சில தடங்கல்களால் அந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டே போனது.

இந்நிலையில், தற்போது பழைய புடு சிறைச் சாலை இருந்த 7.85 ஹெக்டர் நிலப்பரப்பில் பிரமாண்டமான வணிக வளாகம் ஒன்றை நிர்மாணிக்க அந்த நிலத்தின் உரிமையாளரான ஊடா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனமும், (UDA Holdings Berhad) ஊழியர் சேம நிதி வாரியமும் மற்றொரு பிரபல தனியார் நில வீடமைப்பு மேம்பாட்டாளரான இகோ வோர்ல்ட் டெவலப்மென்ட் (ECO World Development) நிறுவனமும் இணைந்து கைகோர்த்துள்ளனர்.

#TamilSchoolmychoice

புக்கிட் பிந்தாங் சிட்டி சென்டர் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் ஏறாத்தாழ 7 பில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்புடைய திட்டமாகும். சூரியா கேஎல்சிசி வணிக வளாகத்திற்கு நிகரான வணிக வளாகம் ஒன்றை இந்த பழைய புடு சிறைச்சாலை நிலத்தில் நிர்மாணிக்கும் ஊடா ஹோல்டிங்ஸ் இந்த வணிக வளாகத்தின் உரிமையாளராக இருந்து வரும்.

ஊழியர் சேமநிதி வாரியத்தின் பங்கேற்பு

ஊடா ஹோல்டிங்ஸ், இகோ வோர்ல்ட் இரண்டு நிறுவனங்களும் தலா 40 சதவீத பங்குடைமையை இந்தத் திட்டத்தில் கொண்டிருக்கும் வேளையில், ஊழியர் சேம நிதி வாரியம் எஞ்சிய 20 சதவீத பங்குடைமையைக் கொண்டிருக்கும்.

இந்த மாபெரும் திட்டத்திற்காக சிறப்பு நிறுவனம் ஒன்று புதிதாக அமைக்கப்படும். 2015 ஆம் ஆண்டு வாக்கில் இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தத் திட்டத்திற்கான உருவாக்கப் பணிகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளை செய்வதிலும் தேவைப்படும் ஆவணங்களை தயாரிப்பதிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன.

கட்டி முடிக்கப்பட்டவுடன் இந்தத் திட்டத்தில் 7 பிரிவுகளைக் கொண்ட வர்த்தக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டிற்கான கட்டிடங்களும் அலுவலக அடுக்குமாடிகளும் ஒரு தங்கும் விடுதியும் ஒரு பிரம்மாண்டமான வணிக வளாகமும் இடம் பெற்றிருக்கும்.

இந்த வணிக வளாகம் ஒரு மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை வாடகைக்கு விடக் கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.

முழுமை பெற்றவுடன் இங்கு அமைய போகும் வணிக வளாக பேரங்காடி நாட்டிலேயே பெரியதாக இருக்கும் என்பதுடன் துருக்கி நாட்டில் இருப்பது போன்ற மிகப் பெரிய சந்தை ஒன்றையும் கொண்டிருக்கும். இதன்மூலம் புதிய வணிகர்கள் தங்களின் பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்ய முடியும்.

பழைய புடு சிறைச்சாலையால் வாஸ்து கோளாறா?

1996ஆம் ஆண்டில் பழைய புடு சிறைச் சாலை அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டாலும், அதன் பின்னர் இந்த நிலப்பரப்பில் வணிக வளாகத்தை உருவாக்கும் திட்டம் பல்லாண்டு காலமாக தடைபட்டு வந்தது.

அப்படியே இந்தத் திட்டம் உருபெற்றாலும் இங்கு வணிகம் செய்ய வர்த்தகர்கள் குறிப்பாக சீனர்கள் முன்வர மாட்டார்கள் என்ற கருத்தும் நிலவி வந்தது. காரணம், முன்பிருந்த புடு சிறைச் சாலை 101 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதாலும் இங்கு கொடூரமான குற்றவாளிகள் பலர் சிறைப்பட்டிருந்தார்கள் என்பதாலும் இந்த சிறைச் சாலையில் பல நூறு தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்ததாலும், இந்த இடத்தில் வணிகம் செய்ய வர்த்தகர்கள் முன் வரமாட்டார்கள் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

தற்போது புதிய வர்த்தக கூட்டமைப்பினர் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள வந்திருப்பதால் இதுபோன்ற கருத்துகள் எடுபடாது என்றும் திட்டம் நிச்சயம் வெற்றிகரமாக உருவாகும் என்றும் ஊடா ஹோல்டிங்ஸ் தலைவர் ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.