சென்னை, ஜூன் 30 – ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகனை ஏவுவதை பார்வையிடச்செல்லும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இந்திய நேரப்படி காலை 9.52மணிக்கு பிரான்ஸ் நாட்டின் ‘ஸ்பாட்-7’ செயற்கை கோள் உட்பட 5 செயற்கை கோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி.-சி 23’ ஏவுகனை விண்ணில் ஏவப்படுகிறது. இதைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிடுகிறார்.
இதற்காக ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் மோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பிரதமரின் விமானம், மாலை 3.50 மணிக்கே தரை இறங்கி இருக்க வேண்டும். ஆனால் மோசமான வானிலை காரணமாக 40 நிமிடம் தாமதமாக 4.30மணிக்கு தரை இறங்கியது.
பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக சென்னை வந்த நரேந்திர மோடியை, விமான நிலையத்தில் கவர்னர் கே.ரோசய்யா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அவரைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் வரவேற்றார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் மலர்க்கொத்து கொடுத்து பிரதமரை வரவேற்றனர். வரவேற்பு முடிந்ததும் பிரமுகர்களுக்கான ஓய்வறையில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் 10 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.