சென்னை, ஜூன் 30 – போரூர் அடுக்குமாடி கட்டிட விபத்து நடந்த இடத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் பார்வையிடுகிறார். சென்னை போரூரில் நேற்று முன்தினம் 11 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
இதனையடுத்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில், நெல்லூர் மாவட்ட இணை ஆட்சியர் ரேகா பிரியதர்ஷினி தலைமையில் சிறப்பு குழு ஒன்று நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டது. மேலும் ஆந்திர அமைச்சர் சீதாராகவராவும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.
ஆந்திர இணை ஆட்சியர் ரேகா, தேசிய பேரிடர் மீட்புக்குழு இயக்குனர்கள் சர்மா, ராமானுஜன் ஆகியோருடன் கட்டிடம் இடிந்த இடத்தில் நடைபெறும் மீட்புப்பணிகளை பார்வையிட்டார். மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் பலியான ஆந்திர மாநில தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இணை ஆட்சியர் ரேகா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“கட்டிட இடிபாடுகள் மீட்பு பணி துரிதமாக நடைபெறுகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான ஆந்திர மாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று மதியம் 3.00 மணிக்கு (மலேசிய நேரம் 5.30) நேரில் பார்வையிடுகிறார் என்று அவர் கூறினார்.