பொன்னேரி, ஜூலை 7 – சென்னையை அடுத்த சோழவரம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட 11 கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட தனியார் சேமிப்பு கிடங்குகள் (வேர் ஹவுஸ்) உள்ளன.
இதில், எடப்பாளையத்தில் இருந்து உப்பரபாளையம் செல்லும் சாலையில் பாலா என்பவருக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ளது.
இங்கு கன்டெய்னர் பெட்டிகளில் கொண்டு வரப்படும் மருந்து உள்ளிட்ட பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சேமிப்புக் கிடங்கை சுற்றிலும் 600 அடி நீளத்தில் 20 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சேமிப்பு கிடங்கு அருகில் மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. இதில் ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டிட வேலைப் பார்த்து வருகின்றனர்.
இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், பாலா சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் ஓரத்தில் சிறிய அளவில் குடிசை அமைத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் எடப்பாளையம், செங்குன்றம், அலமாதி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென கட்டிடத் தொழிலாளர்கள் குடிசை அமைத்து தங்கியிருந்த இடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காரணத்தால் விபத்து குறித்து உடனடியாக யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் அதிகாலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சுவர் இடிந்து விழுந்துள்ளதை கண்டு சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று, ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 மணி நேரம் கழித்து மீட்புப் பணிகள் நடைபெற்றதால் 2 வயது குழந்தை உட்பட 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கியவர்கள் அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த நாகராஜ் (19) என்பவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மனோகரன், பொன்னேரி டி.எஸ்.பி எட்வர்ட், பொன்னேரி கோட்டாட்சியர் மேனுவல் ராஜ் ஆகியோர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
(இறந்தவர்களின் சடலங்களை (பெண்கள் உட்பட) மனிதாபிமானம் இன்றி, மருத்துவ விதிமுறைகளுக்கு எதிராக, மேலே ஒரு துணி கூடப் போர்த்தாமல் இப்படி வீதியில் கிடத்தி வைத்து, அதை பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி இருக்கும் தமிழக மீட்புக்குழுவினருக்கும், காவல்துறைக்கும் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன)