ஜூலை 7 – அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு, கடந்த சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளமான ‘டுவிட்டர்’ (Twiitter) மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விழிப்படைந்த பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து கட்டடங்களுக்கும் உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிக்கச் செய்தது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த அமெரிக்கப் புலனாய்வுத்துறையினரும், கல்லூரி காவலர்களும் இணைந்து வெடிகுண்டைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இது குறித்து கேம்பிரிட்ஜ் பகுதியின் காவல் துறை உயர் அதிகாரி ஜெரிமி வார்னிக் கூறுகையில், “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக நான்கு தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வந்தன.
மேலும், ஐவி லீக் பள்ளி அருகே துப்பாக்கியுடம் மர்ம மனிதன் ஒருவன் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், இந்த பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.