கோலாலம்பூர்,ஜூலை 3 – ஆயுதப் போராளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து மலேசியர்களில், ஒருவர் மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் தற்போது தெற்கு பிலிப்பைன்சில் பதுங்கியுள்ளதாகவும் நம்பப்படுகின்றது.
இது குறித்து தேசிய காவல் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், “டாக்டர் மாஹ்முட் ஹமாட் (வயது 36) (எ) அபு ஹன்சாலா என அடையாளம் காணப்பட்டிருக்கும், அந்த மலாயாப் பல்கலைக்கழக இஸ்லாமிய கல்வி பிரிவில் பணிப்புரியும் விரிவுரையாளர், 4 பேருடன் சேர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தாமான் செலாயாங், பத்து மலையில் வசிக்கிறார்”என்று தெரிவித்தார்.
மலேசியாவில் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி, கைது செய்யப்பட்ட 19 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புக்கிட் அம்மான் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, இவர்கள் 5 பேரை பற்றிய தகவல் கிடைத்தது என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.
அபு ஹன்சாலாவோடு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட மற்ற நால்வரின் பெயரையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதன் படி, மலாயாப் பல்கலைக்கழகத்தில் கல்வி சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் உரிமையாளர் முகமட் நஜிப் ஹுசென் (வயது 36) (எ) ஆப்ரஹாம், ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கோத்தா டாமான் சாராவில் உள்ள தைனியா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.
அடுத்தது, செலாயாங் மாநகர சபை செயலகப் பிரிவின் ஊழியர், முகமட் ஜொரைமி ஆவாங் ராய்மி (வயது 39) அல்லது அபு நூர் என்று அழைக்கப்படும் இவர் செலாயாங் பாருவில் வசிக்கிறார். இவர் அபு ஹன்சாலாவின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் இருக்கிறார்.
இப்பட்டியலில் உள்ள மற்ற இருவர், முகமட் அமின் பாகோ (வயது 31), கம்போங் திதிங்கன், தவாவ்,சபா மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் ஜெக்னால் அடில் (வயது 30), கம்போங் குர்னியா ஜெயாவை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் மூவர், ஈராக்கின் இஸ்லாமிய மாநிலம் மற்றும் சிரியாவில் லேவண்ட்(isil) இயக்கத்தில் சேருவதற்கு வேண்டிய பயணங்களை ஏற்பாடு செய்கின்றனர் என்றும், இருவர் தெற்கு பிலிபைன்ஸில் இருக்கும் அபு சயாப் குழுவை சேர்ந்த சபா டாருள் இஸ்லாம் குழு உறுப்பினர்கள் என்றும் காலிட் தெரிவித்தார்.
இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால், காவல் அதிகாரி முகமட் ஹசில் அசார் எண் 03-22667010 அல்லது 011 -21046850 அல்லது அருகாமையில் அமைந்துள்ள காவல் துறையை தொடர்புக் கொள்ளலாம் அல்லது ctd.e8m@gmail.com என்ற இணையத்தள முகவரிக்கும் தகவல் அனுப்பலாம் என்றும் காவல்துறை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.