நியூயார்க், ஜூலை 04 – இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கெதிரான வன்முறைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தொடர் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை அரசு அதனை இரும்புக் கரம் கொண்டு தடுக்காமல், வன்முறையாளர்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது என பல்வேறு நாடுகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்ளுக்கு எதிராக 350 தாக்குதல்களும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 150 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது”
“இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது” என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள சிறுபான்மையினர் மீது பகை உணர்ச்சியை வளர்க்கும் விதத்தில் பெளத்த அமைப்புகள் செயல்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.